சுண்டியிழுக்கும் சுவையில் மணித்தக்காளி கீரை தண்ணிச்சாறு!
மணத்தக்காளி என்று நாம் பரவலாக அழைத்தாலும் , கரிய மணி போன்ற தக்காளிப் பழங்கள் கொண்டதால் ‘மணித்தக்காளி’ – என்பதே இக்கீரையின் சரியான பெயர்.
தஞ்சாவூர் பக்கத்தில் மிகவும் விரும்பிச் செய்யப்படும் இந்த தண்ணிச்சாறு அருமையான சுவை கொண்டது. மிகவும் எளிமையாக 10 நிமிடங்களில் செய்யக் கூடியது. வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவற்றை நீக்க வல்லது.
தேவையான பொருட்கள்:
மணித்தக்காளி கீரை – 1 கட்டு.
சின்ன வெங்காயம் – 15
வரமிளகாய் – 3
சீரகம் – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
தேங்காய்ப் பால் – 1 கப்
மஞ்சள்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
மணித்தக்காளி கீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பாதியாக நறுக்கி வைக்கவும். அரை மூடிதேங்காயை நீர் விட்டு அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு வரமிளகாய், சீரகம், வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், அரிந்த வைத்துள்ள கீரை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கிய பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு கலந்து விட்டபின் அடுப்பை அணைத்துவிடவும். அவ்வளவுதான்!
இதை அப்படியே சூப் போல பருகலாம், சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம். ஒரு முறை இந்த செய்முறையைச் செய்து பாருங்கள். இதன் சுண்டியிழுக்கும் சுவை காரணமாக வாரம் ஒருமுறையாவது தண்ணிச்சாறு செய்து விடுவீர்கள்.
குறிப்பு: கீரை முழுவதும் வெந்த நிலையில் கடைசியாக உப்பைச் சேர்க்க வேண்டும். தேங்காய்ப்பால் சேர்த்தபின் கொதிக்க விடக் கூடாது.
இதே செய்முறையில் மணித்தக்காளி கீரைக்குப் பதிலாக அகத்திக்கீரை, முருங்கைக்கீரை கொண்டும் தண்ணிச்சாறு செய்யலாம்.