WTC வரலாற்றில் முதல் இந்திய வீரர்.. தெறி சாதனை படைத்த அஸ்வின்.. 37 வயதிலும் மிரட்டும் தமிழக வீரர்!
ஐதராபாத் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் ரசிகர்களின் கவனத்தை இழுக்க ஐசிசி தரப்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் 2 ஆண்டுகளுக்கு மிகாமல் நடத்தப்படும். 2019ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சாம்பியனாக நியூசிலாந்து அணி 2021ஆம் ஆண்டு வாகை சூடியது. அதன்பின் 2023ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா அணி வென்றது.
இதுவரை 2 முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்றுள்ள நிலையில், இரு முறையும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த இரு முறையும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதற்கு இந்திய அணியின் பவுலர்களே மிகமுக்கிய காரணம். அதிலும் உள்நாட்டில் விளையாடப்பட்டு வரும் டெஸ்ட் தொடரில் வெற்றிபெற ஸ்பின்னர்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர்.
அந்த வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். இவருக்கு முன் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் நேதன் லயன் இருவரும் தலா 169 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் மற்றும் கிராலி இருவரையும் வீழ்த்தி அஸ்வின் அசத்தினார். அதுமட்டுமல்லாமல் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் 8 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது. இந்த 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால், அனில் கும்ப்ளேவுக்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க முடியும். இதனால் அஸ்வின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.