தப்பிய ஜோ ரூட்.. டிஆர்எஸ்-ல் 3வது நடுவர் செய்த தவறு.. அம்பயரை கிழித்து தொங்கவிட்ட பீட்டர்சன்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி தரப்பில் கிராலி – பென் டக்கெட் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

இந்திய அணி தரப்பில் பும்ரா முதல் ஓவரை வீசினார். இதையடுத்து சிராஜ் அட்டாக்கில் வந்தார். இருவரும் இணைந்து விக்கெட் வீழ்த்த முடியாத நிலையில், 8வது ஓவருடன் அட்டாக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் அட்டாக்கில் வந்தனர். இந்த நிலையில் முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அஸ்வின் வீசிய பந்தில் டக்கெட் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையடுத்து வந்த போப் ஜடேஜா பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான ஜோ ரூட் களமிறங்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஜோ ரூட்டுக்கு ஜடேஜா வீசிய 2வது பந்திலேயே, பால் அவரது பேடில் பட்டு சென்றது. அப்போது நடுவரிடம் விக்கெட் என்று ஜடேஜா தீவிரமாக அப்பீல் செய்தார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்காத நிலையில், ரோகித் சர்மா டிஆர்எஸ் முறையீடு செய்தார்.

அப்போது பந்தில் பேட்டில் உரசியதாக 3வது நடுவர் நாட் அவுட் என்று அறிவித்தார். இதன்பின் சில நிமிடங்கள் பின் வர்ணனைக்கு வந்த பீட்டர்சன், ஜடேஜா வீசிய பந்தை மீண்டும் பார்த்து சில விஷயங்களை விளக்கமாக கூறினார். அதில் ஜடேஜா வீசிய பந்து ஜோ ரூட்டை எட்டுவதற்கு முன்பாகவே ஸ்னிக்கோமீட்டரில் சத்தம் வரும் காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நடுவர் அதனை சரியாக பார்த்திருக்க வேண்டும் என்று பீட்டர்சன் காட்டமாக விமர்சித்தார்.

ஜடேஜா வீசிய பந்து ஜோ ரூட் பேட்டில் படவில்லை என்றால், நிச்சயம் அது அவுட் தான் என்று பீட்டர்சன் வெளிப்படையாக கூறினார். அப்போது அருகில் இருந்த ரவி சாஸ்திரி, 3வது நடுவருக்கு சத்தங்கள் வந்ததால் சில சந்தேகம் வந்திருக்கலாம். அப்படியான் சந்தேகங்கள் வரும் போது, சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு அளிக்க வேண்டும். நடுவர் அப்படி கூட சிந்தித்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *