மீண்டும் பரவும் கோவிட்; தடுப்பூசி தேவையில்லை… ஏன் தெரியுமா?!
வாழ்வின் கொடூர நாள்களை கோவிட் மக்களுக்குக் காட்டிவிட்டது. மக்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை பாரபட்சமில்லாமல் சூறையாடிய கோவிட் முற்றிலும் ஒழிந்த பாடாக இல்லை.
அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் தாக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இப்போது கடந்த சில வாரங்களாக மீண்டும் புதிய வேரிய்ன்ட் முளைத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் புதிய வேரியன்டான JN.1-ன் பாதிப்பு அதிகரித்து இருந்தது. அமெரிக்காவைத் தாண்டி பல நாடுகளிலும் இந்த வேரியன்ட்டின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள நாடுகள் கோவிட் 19 பாதிப்புகள் மற்றும் அதன் பரவலை கண்காணிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.
BA.2.86-ன் வழிதோன்றிய புதிய வேரியன்டான JN.1-ன் பாதிப்பு இந்தியாவிலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை தொடர்ந்து தற்போது அச்சுறுத்தி வரும் புதிய வேரியன்ட்களுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு பதிலளித்துள்ள இந்தியாவின் SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா, “தற்போதுள்ள புதிய சப் வேரியன்ட்டுக்கு எதிராகக் கூடுதல் டோஸ் தடுப்பூசி தேவையில்லை” என்று கூறியுள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரையில் அக்டோபர் மாத இறுதியில் இருந்து இதுவரையில் புதிய வேரியன்ட் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 என பதிவாகி உள்ளது.
ஒமிக்ரான் போன்ற வேரியன்ட்கள் ஏற்படுத்தும் காய்ச்சல், இருமல், கடுமையான உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளையே JN.1 வேரியன்ட்டும் வெளிப்படுத்துகிறது. அதனால் ஒருவர் இதனை வேறுபடுத்தி அறிவது கடினமாக இருக்கிறது.
எனவே 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் (Comorbidity), புற்றுநோய் நோயாளிகள் போல, எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது அவசியம்.
ஆகவே புதிய வேரியன்ட்டிற்கு எதிராகக் கூடுதல் டோஸ் தடுப்பூசி தேவையில்லை. நோய் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்.கே. அரோரா கூறியுள்ளார்.