ஏதர் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் ரிஸ்டா ஸ்கூட்டர்! சிறப்பம்சங்கள் என்ன?
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான, ஏதர் எனர்ஜி நிறுவனம் ரிஸ்டா என்ற பெயரிலான ஃபேமிலி ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஆண்டில் அந்த நிறுவனம் முன்னெடுக்க இருக்கும் கம்யூனிட்டி தின கொண்டாட்ட நாளில் இந்தப் புதிய வாகனம் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.
முன்னதாக இந்த ஃபேமிலி ஸ்கூட்டருக்கு ஏதர் நிறுவனம் ‘டீசல்’ என்று பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி தருண் மேத்தா, இதுகுறித்து டிவிட்டர் தளத்தில் விளக்கம் அளித்தபோது, ஸ்கூட்டர் தயாரிப்பு திட்டம் மட்டுமே டீசல் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டது என்றும், வாகனத்திற்கு அதே பெயர் சூட்டப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆக, புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்கூட்டருக்கு ஏதர் ரிஸ்டா என்று பெயரிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் டீசர் வீடியோ ஒன்றை ஏதர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும்?
ஏற்கனவே வெளியான தகவல்கள் மற்றும் டீசரில் காண்பிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஏதர் ரிஸ்டா ஸ்கூட்டரில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிய வந்துள்ளது. அதன்படி எளிமையான டிசைனுடன், சைடு பேனல்களில் லேசான வெட்டுக்களுடன் புதிய ஸ்கூட்டர் அறிமுகம் ஆகும் எனத் தெரிகிறது.
அதேபோல முன்பக்க பேனலில் எல்.இ.டி. ஹெட்லைட் செங்குத்து வாக்கில் இணைக்கப்பட்டிருக்கும் என்றும், அதேபோன்று பின்பக்க லைட் ஒன்று இடம்பெறும் என்றும் தெரிய வந்துள்ளது. ஏதர் நிறுவனத்தின் தற்போதைய 450எக்ஸ் மாடலைக் காட்டிலும், அதிக இடவசதியைக் கொண்டதாக ரிஸ்டா இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த ஸ்கூட்டரில் உள்ள ஒட்டுமொத்த வசதிகள் மற்றும் திறன்கள் குறித்த தகவலை ஏதர் நிறுவனம் இதுவரையிலும் வெளியிடவில்லை. எனினும் ரிஸ்டா ஸ்கூட்டரில் இரண்டு பேட்டரி வேரியண்ட்கள் இடம்பெறும் என்றும், 7 இன்ச் கொண்ட எல்சிடி திரை ஒன்று இடம்பெறும் என்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏதர் நிறுவனத்தின் முந்தைய மாடல்கள்:
எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஏதர் நிறுவனம் இந்திய அளவில் 3ஆவது இடத்தில் உள்ளது. சுமார் ரூ.1.09 லட்சத்துகு கிடைக்கும் ஏதர் 450எஸ் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால், 115 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும். இந்த அடிப்படை வேரியண்ட் ஸ்கூட்டரில் 2.9 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதேவேளை இந்த நிறுவனத்தின் புதிய ஏதர் 450S HR வகை ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 156 கிமீ வரை பயணிக்கலாம். இதில் 5.4 kW மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, மேம்பட்ட மாடலான ஏதர் 450X மின்சார ஸ்கூட்டர் இப்போது இரண்டு பேட்டரி விருப்பங்களுடன் கிடைக்கிறது. ஒன்று 2.9 kWh திறன் கொண்டதும், மற்றொன்று 3.7 kWh திறன் கொண்டதாகவும் இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 146 கிமீ வரை இந்த பைக்கில் செல்லலாம். இதன் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆக உள்ளது.