இந்திய குடியரசு தினம் உருவானது எப்படி?
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்டு 29-ல் அரசியல் அமைப்பு வரைவுக் குழு அமைக்கப்பட்டது. அதில் 7 உறுப்பினர்கள் இருந்தனர். டாக்டர் அம்பேத்கர், என்.கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் கே.எம்.முன்ஷி, சையத் முகமது சாதுல்லா, என்.மாதவ்ராவ், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் வரைவுக்குழுவில் இருந்தனர். இக்குழுவிற்கு அம்பேத்கர் தலைமையேற்றார்.
இந்த குழு 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. அந்த அரசியலமைப்பு, திட்டமிடப்பட்ட கூட்டங்களில் 114 நாட்கள் கலந்துரையாடப்பட்டது. 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியல் நிர்ணய சபையால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பல நாடுகளின் சிறப்பு
பல நாடுகளில் இருக்கும் சிறப்பு அம்சங்களை எல்லாம் தன்னகத்தே கொண்டது நம் அரசியலமைப்புச் சட்டமாகும். 1929-ம் ஆண்டு டிசம்பர் லாகூர் மாநாட்டில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே விடுதலை நாளை 1930-ல் இருந்து ஜன.26 கொண்டாடுவதாக தீர்மானிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. விடுதலைக்குப் பின்னர் அரசியலமைப்புச் சட்டம் உருவான பிறகு அது 1950-ம்ஆண்டு ஜன.26-ம் தேதி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்த நாளே குடியரசு நாளாகும். ஆம். 1950-ல் ஜன.26-ம் தேதி சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசாக அது மலர்ந்தது. குடியரசு தினத்தன்று முப்படை அணிவகுப்பு நடைபெறும். குடியரசுத் தலைவர் தேசியக் கொடியேற்றுவார்.
நாம் எல்லோரும் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர்கள். நமக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நம்மிடையே இருக்கிறது. மிட்டாய் சாப்பிட்டு, சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டுகளித்து ஓய்வெடுக்கும் விடுமுறை நாளாக குடியரசு தினத்தை நினைக்காமல் அதன் சிறப்பை உணர்ந்து நல்ல குடிமகனாக நாட்டிற்கு நலமும், வளமும் சேர்க்க உறுதிபூண்டு பாடுபட வேண்டும்.