ஆந்திரம்: கூட்டணி குழப்பத்தில் பாஜக
வரும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் கூட்டணி அமைப்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் பாஜக உள்ளது.
அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆந்திரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட தெலுங்கு தேசம் கட்சி விரும்புகிறது.
அதே வேளையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலைப் போலவே இம்முறையும் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று ஆந்திரத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கருதுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் அடித்தளமாக உள்ளன. பாஜகவுடன் தேர்தலில் கூட்டணி அமைப்பது தங்கள் கட்சிக்குப் பொருந்தாது என்று அக்கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால் நாடாளுமன்றத்தில் மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தங்கள் கட்சி வழங்கி வருவதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் கூறியதாவது:
பாஜகவுக்கு தனது கூட்டணிக் கட்சிகளுடன் சில விவகாரங்களில் கருத்து வேறுபாடு உள்ளது. எனினும் எங்கள் கட்சித் தலைவர் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி பாஜக தலைமையுடன் நல்லுறவைப் பேணி வருகிறார். ஆட்சியில் பங்கு எதையும் கோராமல் அவர் பாஜகவை ஆதரித்து வருகிறார் என்றார்.
இந்நிலையில் வரும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் கூட்டணி அமைப்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் பாஜக உள்ளது. அக்கட்சியின் ஒரு பிரிவு தலைவர்கள் முன்னாள் முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றனர்.
ஆந்திரத்தில் சில இடங்களில் வெற்றி பெறவும் தங்கள் தொண்டர்களுக்கு உற்சாகமளிக்கவும் இது ஒன்றே வழி என்று அவர்கள் கருதுகின்றனர். ஆந்திரத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனை கட்சியுடன் கூட்டணியைத் தொடர்கிறது. இம்முறை பாஜகவுடனும் கூட்டணி அமைத்து ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியை அளிக்க முடியும் என்று தெலுங்கு தேசம் கருதுகிறது. எனினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தேர்தல்கள் ரீதியாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்து வருகிறது. தனது அரசு அமல்படுத்தி வரும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் மீது அக்கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.
எனினும், தெலங்கானாவில் 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய கே.சந்திரசேகர் ராவின் பாணியில் ஜெகன்மோகன் ரெட்டியின் செயல்பாடு, ஆளும் முறை ஆகியவை உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தெலங்கானாவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் கே.சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சி தோல்வியடைந்தது.
சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்தது உள்ளிட்ட அடக்குமுறை ரீதியிலான செயல்பாடுகள் மூலம் தங்கள் கட்சியை பலவீனப்படுத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. எனவே, வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தங்களது கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் நம்புகின்றனர்.
பாஜகவுக்கு பெரிய வாக்கு வங்கி இல்லை என்று கூறும் அத்தலைவர்கள், மத்திய ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தங்களுக்கு ஆக்கபூர்வமான தோற்றத்தை அளிக்கும் என்று தெரிவிக்கின்றனர். மாநில ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் பலத்தை எதிர்கொள்ளபாஜக கூட்டணி உதவும் என்று தெலுங்கு தேசம் கட்சி நம்புகிறது.
சந்திரபாபு நாயுடுவை கடந்த ஜூன் மாதத்தில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சந்தித்தார். நாயுடுவின் கைதைத் தொடர்ந்து அவரது மகன் நாரா லோகேஷையும் அமித் ஷா சந்தித்தார். எனினும் ஆந்திர மாநிலத்தில் கூட்டணி விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று பாஜக கூறி வருகிறது.