விரைவில் தமிழகம் வருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே..!
2019ம் ஆண்டு தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலும், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலும் கூட்டணி அமைத்து யுபிஏ அணி தேர்தலை எதிர்கொண்டது. அப்போது தமிழகத்தில் திமுக 20 இடங்களில் போட்டியிட்ட நிலையில் காங்கிரசுக்கு-9, சிபிஐ-2, சிபிஎம்-2, விசிக-2, முஸ்லிம் லீக்-1, இந்திய ஜனநாயக கட்சி-1, கொமதேக-1, மதிமுக-1 என்ற அளவில் தொகுதி பங்கீடு நடைபெற்றது.
39 இடங்களில் போட்டியிட்டதில் தமிழ்நாட்டில் 38 இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. அங்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இதனிடையே 2024 மக்களவைத் தேர்தலிலும் இதே தொகுதி பங்கீட்டு முறையை முன்வைக்க திமுக விரும்புவதாக கூறப்படுகிறது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த முறை கூடுதலாக இடங்கள் கேட்டு பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சார்பில் அதன் தலைவராக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து இந்தியா கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைவில் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு வருகை தரும் கார்கே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.