விரைவில் சவுதியில் முதல் மதுபான கடை திறப்பு..!

தலைநகர் ரியாத்தில் தனது முதல் மதுபானக் கடையைத் திறக்கத் தயாராகி வருகிறது சவுதி அரேபியா. இது முஸ்லிம் அல்லாத தூதர்களுக்கு மட்டுமான கடை என்று கூறப்படுகிறது.

இது குறித்து வெளியான அறிக்கையில், இங்கு மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்கள் முதலில் கைபேசி செயலி மூலம் பதிவு செய்து, வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து அனுமதி குறியீட்டைப் பெற வேண்டும். மேலும் தங்களுக்கான மாதாந்திர ஒதுக்கீட்டு அளவினை மதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தீவிர பழமைவாத முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவை சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக திறந்து விடும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசின் முயற்சிகளின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்தப் புதிய கடையானது ரியாத்தின் தூதரக குடியிருப்பில் அமைந்துள்ளது. முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுக் குடிமக்கள் இந்தக் கடையை அணுக முடியுமா என்பது குறித்து தெளிவாக கூறப்படவில்லை. சவுதி அரேபியாவில் பல லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.

இந்தப் புதிய கடை இன்னும் ஒரு சில வாரங்களில் திறக்கப்பட உள்ளது. சௌதி அரேபியாவில் மது அருந்துவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. இந்தக் குற்றத்திற்கு நாடு கடத்துதல், அபராதம் அல்லது சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றன.

தற்போதைய நிலையில் கள்ளச் சந்தையில் மட்டுமே மதுபானம் கிடைக்கிறது. பல ஆண்டுகளாக கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி வந்த சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.

அந்த வகையில் அவர் எடுத்த நடவடிக்கைகளான மதச்சார்பற்ற சுற்றுலாவுக்கு அனுமதி, இசை நிகழ்ச்சிகள் மற்றும் பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்தல், ஆகியவற்றுடன் தற்போது இந்த நடவடிக்கையும் சேர்ந்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *