IND vs ENG : ஆப்பு வைத்துக் கொண்ட இங்கிலாந்து.. 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி புத்திசாலித்தனமான நடந்து கொள்வதாக நினைத்து அணித் தேர்வில் பெரிய சொதப்பல் ஒன்றை செய்துள்ளது. எந்த அளவுக்கு என்றால், இதுவரை இங்கிலாந்து அணியின் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ஒரு அணியை தேர்வு செய்ததே இல்லை.
இங்கிலாந்து செய்த தவறு என்ன? இந்திய ஆடுகளங்கள் ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் மூன்று ஸ்பின்னர்களை அணியில் ஆட வைக்க முடிவு செய்தது இங்கிலாந்து அணி. ஆனால், அதற்காக அணியில் ஒரே ஒரு வேகப் பந்துவீச்சாளர் போதும் என்ற முடிவுக்கு வந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்-ஐ மட்டும் அணியில் சேர்த்தது. அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
1877 முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வருகிறது இங்கிலாந்து அணி. அதன் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அந்த அணி ஒரு முறை கூட ஒரே ஒரு வேகப் பந்துவீச்சாளரை மட்டும் அணியில் தேர்வு செய்து போட்டியில் களமிறங்கியதில்லை. குறைந்தது இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களாவது அந்த அணியில் இருப்பார்கள்.
இதில் மேலும் ஒரு மோசமான முடிவும் உள்ளது. வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் பேட்டிங்கிலும் கை கொடுப்பார் என்பதால் அவரை தேர்வு செய்து இருக்கிறது இங்கிலாந்து அணி. ஆனால், அவர் புது பந்தில் பந்து வீசக் கூடிய பந்துவீச்சாளர் இல்லை. கடைசியாக அவர் 2015இல் தான் ஒரு போட்டியில் துவக்க பந்துவீச்சாளராக பந்து வீசி இருந்தார்.
மூன்று ஸ்பின்னர்களுக்காக இந்த பெரிய முடிவை இங்கிலாந்து அணி எடுத்தாலும், அதுவும் எந்த பலனும் அளிக்கவில்லை. இங்கிலாந்து பேட்டிங் செய்த போது இந்தியாவின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் 8 விக்கெட்களை அள்ளினர். ஆனால், இங்கிலாந்து அணியில் நீண்ட காலமாக அணியில் இடம் பெறாத ஜாக் லீச் மற்றும் இரண்டு அனுபவம் இல்லாத ஸ்பின்னர்களான ரெஹான் அஹ்மத் மற்றும் டாம் ஹார்ட்லியை வைத்துக் கொண்டு திணறி வருகிறது. இந்திய பேட்ஸ்மேன்களை எந்த வகையிலும் இந்த ஸ்பின்னர்களால் அச்சுறுத்த முடியவில்லை. இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் தன் முதல் இன்னிங்க்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.