அந்த பையனுக்கு பயமே இல்ல.. ரிஷப் பண்ட்-ஐ பார்ப்பது போல் இருந்தது.. ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு!
இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடியான ஆட்டம் ரிஷப் பண்டை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு ரிஷப் பண்ட் இல்லாததும் முக்கிய காரணமாக அமைந்தது. அவர் விளையாததன் விளைவால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் இருக்கும் ஒரே இடதுகை பேட்ஸ்மேனாக ஜடேஜா மட்டுமே இருந்தார். சமீப காலங்களில் இடதுகை பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனால் இந்திய அணியின் டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்களை கொண்டு வர ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி முடிவு செய்தது. இதனால் சுப்மன் கில்லை 3வது இடத்திற்கு தள்ளிவிட்டு, தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் கொண்டு வரப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி அசத்தினார் ஜெய்ஸ்வால்.
அதன்பின் தென்னாப்பிரிக்கா மண்ணில் சோபிக்க தவறினாலும், எந்த பவுலருக்கும் பயமின்றி எதிர்த்து அதிரடியாக ஆடியது பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத் மண்ணில் நேற்று தொடங்கியது. இதன் மூலம் இந்திய மண்ணில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல்முறையாக களமிறங்கினார்.
சமீப காலங்களில் இந்திய பேட்ஸ்மேன்களே ஸ்பின்னர்களுக்கு திணறி வந்த நிலையில், ஜெய்ஸ்வாலின் ஆட்டம் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் இங்கிலாந்து ஸ்பின்னர்களை பொளந்து கட்டினார் ஜெய்ஸ்வால். இங்கிலாந்து அணியின் ஹார்ட்லி வீசிய முதல் பந்திலேயே சிக்சர் அடித்து வரவேற்ற ஜெய்ஸ்வால், ஸ்பின்னர்களை ஃபிரண்ட் ஃபூட்டில் ஆடியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் ஸ்டம்ப் லைனில் வைத்து ஸ்பின்னர்களை எதிர்கொள்ளாமல் ஸ்டம்ப் லைனுக்கு வெளியில் கால்களை நகர்த்தி பவுண்டரிகளாக விளாசினார் ஜெய்ஸ்வால். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. அதில் 70 பந்துகளில் 3 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 76 ரன்களுடன் களத்தில் உள்ளார் ஜெய்ஸ்வால்.
இந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், கடந்த ஐபிஎல் சீசன் அவருக்கு மிகச்சிறந்த ஒன்றாக அமைந்தது. அதேபோல் முதல்தர கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த தொடக்கத்தை அளித்து வந்துள்ளார். அவரின் வளர்ச்சியை மகிழ்ச்சியாக பார்த்து வருகிறேன். ஜெய்ஸ்வாலின் ஆட்டம் கொஞ்சம் ரிஷப் பண்டை நினைவுபடுத்துகிறது. எந்த அச்சமும் இல்லாமல் அவர் பேட்டிங் செய்வது அவருக்கு சரியாக பொருந்தி போகிறது. ஒருமுறை கூட அவரின் கால்கள் தவறாக நகரவில்லை என்று பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது ஆஸ்திரேலியா மண்ணிலேயே நேதன் லயனை பொளந்து கட்டினார் ரிஷப் பண்ட். அதேபோல் கடந்த முறை இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஜாக் லீச் பவுலிங்கில் சிக்சர் ஷோ காட்டினார். கிட்டத்தட்ட அதேபோன்ற அச்சமற்ற கிரிக்கெட்டையே ஜெய்ஸ்வாலும் ஆடி வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.