இதுதான் கேப்டன்சி.. முதல் ஓவரிலேயே ட்விஸ்ட் வைத்த ஸ்டோக்ஸ்.. அவசரப்பட்ட ஜெய்ஸ்வால்.. அசத்திய ஜோ ரூட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2வது நாளின் முதல் ஓவரிலேயே இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் சேர்த்திருந்தது. இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76 ரன்களுடனும், சுப்மன் கில் 14 ரன்களுடனும் களமிறங்கினர். 2வது நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இந்த நிலையில் 2வது நாளின் முதல் ஓவரிலேயே இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ட்விஸ்ட் கொடுத்தார். வேகப்பந்துவீச்சாளரான மார்க் வுட் முதல் ஓவரை வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஜோ ரூட் கைகளில் பந்தை கொடுத்தார். கடந்த சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் மற்றும் மொயின் அலி தான் முதன்மை ஸ்பின்னராக இருந்தனர்.
அதில் ஒரு இன்னிங்ஸில் ஜோ ரூட் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் முதல் நாளிலேயே ஜோ ரூட் பவுலிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நாளில் அவரை பவுலிங் செய்ய அழைக்கவில்லை. இந்த நிலையில் முதல் நாளில் செய்த தவறை உடனடியாக இங்கிலாந்து திருத்தி கொண்டதாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஜோ ரூட் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் பவுண்டரி விளாசி அதிரடியாக தொடங்கினார். ஆனால் அந்த ஓவரின் 4வது பந்திலேயே ஜோ ரூட்டிடமே கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 2வது நாளை மிகச்சிறப்பாக தொடங்கியுள்ளது.
மேலும் ஜாக் லீச் மற்றும் ஜோ ரூட் இருவரும் ஒன்றாக கூட்டணி அமைத்து ஒரே நேரத்தில் வீசும் போது, இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் மிகப்பெரிய முன்னிலை எடுக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து வீரர்கள் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.