75வது குடியரசு தினம்.. சென்னையில் தேசிய கொடியை ஏற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றினார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்று விழா கடந்த ஆண்டு மாற்றப்பட்டது.
இந்நிலையில், குடியரசு தினத்தையோட்டி இன்று காலை 7.30 மணி முதல் அமைச்சர்களை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா இடத்திற்கு வந்தார். இதனையடுத்து 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் முன்னிலையில ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றியவுடன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு, காவல்துறை, தேசிய மாணவர் படை, பல்வேறு காவல் பிரிவினர் மற்றுட் தீயணைப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து பல்வேறு கலைக் குழுக்களின் நாட்டிய நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.