குடியரசு தினவிழா.. யார் யாருக்கு என்ன விருது? தமிழ்நாட்டில் சிறந்த 3 காவல் நிலையங்கள் எவை? முழு விவரம் இதோ.!
அரசு பள்ளி கட்டுவதற்காக தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
75வது குடியரசு தினத்தையோட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
விங் கமாண்டர் விகாஷ் ஷா தலைமையில் நடைப்பெற்ற அணிவகுப்பில், இராணுவப்படை பிரிவு, கடற்படை, வான்படை, கடலோர காவல்ப்படை, தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு சிறப்பு காவல் பெண்கள் படைப்பிரிவு, குதிரைப்படை, தமிழ்நாடு வனத்துறை, சிறைப்படை, ஊர் காவல்படை, உள்ளிட்ட 41 படைகள் அணிவகுப்பு நடத்தினர்.
அணிவகுப்பை தொடர்ந்து வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிற்கான வேளாண் துறை சிறப்பு விருது, முதலமைச்சரின் சிறப்பு விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம், சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருது உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
* கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கன மழையின் போது மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை தனது உயிரை துச்சமென நினைத்து மீட்பு பணியில் ஈடுப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த யாசர் அராபத், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் செல்வசிங் உள்ளிடோருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் வழங்கினார்.
* தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பரவிய காணொலியை சரிபார்த்து அது தமிழ்நாட்டில் நடைப்பெற்றது அல்ல என்பதை ஆதாரப்பூர்வமான தனது இணையதளம் மூலம் வெளியிட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜூபேர் என்பவருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டது.
* திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை முறையாக கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக நெல் உற்பத்தி திறன் பெற்றுள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகனுக்கு சி.நாராயணசாமி நாயுடு அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
* சமீபத்தில் யா. கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்களின் நலன் கருதி ஒரு ஏக்கர் 52 சென்ட் நிலத்தினை, தான் படித்த பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் பொருட்டு கட்டிடங்கள் கட்டுவதற்காக தனது மகள் ஜனனி என்பவரின் நினைவாக நிலம் வழங்கிய ஆயி அம்மாள் என்ற பூரணம் என்பவருக்கு முதலமைச்சர் சிறப்பு விருதினை முதலமைச்சர் வழங்கினார்.
* கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மிச்சத்தக்க வகையில் பணிபுரிந்த தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கப்படும் காந்தியடிகள் காவலர் பதக்கம், இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய்க்கு வழங்கப்பட்டது.
* சென்னை மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் காசி விசுவநாதன், சென்னை காவல் ஆணையரகம், மதுவிலக்கு அமலாக்க பிரிவை சேர்ந்த காவல் ஆய்வாளர் முனியசாமி, மதுரை மண்டலம், மத்திய நுண்ணறிவு பிரிவு, காவல் உதவி ஆய்வாளர் பாண்டியன், இராணிப்பேட்டை மாவட்டம் , அயல்பணி மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமைக் காவலர் ரங்கநாதன் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்.
* சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருது முதல் பரிசு மதுரை மாநகரத்தை சேர்ந்த சி-3 எஸ்.எஸ்.காவல் நிலையத்திற்கும், இரண்டாம் பரிசு நாமக்கல் காவல் நிலையத்திற்கும், மூன்றாம் பரிசு திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.