சொன்னதை விட குறைவாக மைலேஜ் தந்த கார்… கேஸ் போட்டு பெரிய தொகையை நஷ்ட ஈடாக வாங்கிய உரிமையாளர்!
மைலேஜை விரும்பாதே வாகன ஓட்டிகளே இருக்க முடியாது என கூறிவிடலாம். அந்த அளவிற்கு மைலேஜை அதிகம் விரும்பக் கூடிய வாகன ஓட்டிகளே நாட்டில் இருக்கின்றனர். சொல்லப் போனால் இந்தியர்கள் மிகப் பெரிய மைலேஜ் விரும்பிகளாக அறியப்படுகின்றனர். இதனால்தான் மாருதி சுஸுகியின் தயாரிப்புகள் இந்தியாவில் மிக அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
அதிகம் மைலேஜ் தருவதற்கு பெயர்போனவையாக மாருதி சுஸுகி கார்கள் இருக்கின்றன. அதேவேளையில், பாதுகாப்பு விஷயத்தில் பெயரளவில்கூட இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் ரேட்டிங்கை பெறவில்லை. இருப்பினும், இந்தியர்கள் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் தயாரிப்புகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அளவிற்கு அதிகம் மைலேஜிற்கு முக்கியத்துவம் கொடுத்தே மாருதி கார்களை இந்தியர்கள் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மாதிரியான சூழலில் தான் வாங்கிய மாருதி சுஸுகி கார் ஒன்று நிறுவனம் வாக்குறுதி அளித்த மைலேஜை வழங்கவில்லை என கூறி அந்த காரை தயாரித்த நிறுவனத்தின்மீது புகாரை வழங்கி இருக்கின்றார் இந்தியாவைச் சேர்ந்த ஓர் நபர். இதுகுறித்த வழக்கின் மீதான தீர்ப்பே தற்போது வெளியாகி இருக்கின்றது.
வாடிக்கையாளருக்கு சாதகமாகவே அந்த தீர்ப்பு வெளியாகி இருக்கின்றது. சுமார் ஒரு லட்சம் ரூபாயை அந்த வாடிக்கையாளருக்கு வழங்க தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவை பிறப்பித்திருக்கின்றது. ராஜீவ் ஷர்மா எனும் நபர் கடந்த 2004 ஆம் ஆண்டு மாருதி சுஸுகியின் ஜென் (Maruti Suzuki Zen) கார் மாடலை வாங்கி இருக்கின்றார்.
இந்த கார் ஒரு லிட்டருக்கு 16 கிமீ முதல் 18 கிமீ வரையில் மைலேஜ் தரும் என மாருதி சுஸுகி வாக்குறுதி அளித்திருந்தது. இதன் பேரிலேயே அவரும் அந்த காரை வாங்கி இருக்கின்றார். ஆனால், காரை வாங்கிய பின்னரோ அந்த கார் லிட்டர் ஒன்றிற்கு வெறும் 10.2 கிமீட்டர் மைலேஜை மட்டுமே வழங்கி இருக்கின்றது.
இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த அவர், இதன் பின்னரே தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் உதவியை நாடி இருக்கின்றார். இந்த நிலையிலேயே வாக்குறுதி அளித்த மைலேஜை தராத காரணத்தினால் அந்த காரை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது.
மிக முக்கியமாக அந்நிறுவனம் பேப்பர்களில் வழங்கிய விளம்பரங்களை ஆதாரமாகக் கொண்டே அது இந்த தீர்ப்பை வழங்கி இருக்கின்றது. செய்தித்தாள்களில் மாருதி சுஸுகி நிறுவனம் தங்களின் மாருதி சுஸுகி ஜென் கார் லிட்டருக்கு 18 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்று விளம்பரப்படுத்தி இருந்தது.
ஆனால், சொன்னதைவிட பலமடங்கு குறைவான மைலேஜையே ஷர்மா பயன்படுத்தி வந்த ஜென் வழங்கி இருக்கின்றது. இதை அறிந்த பின்னரே பொய்யான விளம்பரம் செய்து விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி 1 லட்ச ரூபாய் இப்போது அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது. பொதுவாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் சொன்ன மைலேஜை எந்தவொரு வாகனம் அப்படியே வழங்காது.
அதில் இருந்து கொஞ்சம் முன்-பின்னே இருப்பதே வழக்கம். ஆனால், இந்த அளவு குறைவாக அது மைலேஜை வழங்கும் என்றால், அந்த வாகனம் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அல்லது நிறுவனம் பொய்யான விளம்பரத்தைச் செய்தே அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்திருக்கின்றது என்றே கருத முடியும். இதன் அடிப்படையிலேயே நீதிமன்றத்தின் தீர்ப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கின்றது.