பட்டையை கிளப்பும் படே மியான் சோட்டே மியான் டீசர்.. அக்ஷய் குமார் கலக்குறாரே
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துவருபவர் அக்ஷய் குமார். தமிழில் அவர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்திருக்கிறார். இந்த சூழலில் அவர் நடிப்பில் உருவாகியிருக்கிருக்கும் படே மியான் சோட்டே மியான் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில் அக்ஷய் குமார் ராணுவ வீரராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அக்ஷய் தமிழில் 2.0 திரைப்படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட்டான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படம் உருவானது. அதில் வில்லனாக அக்ஷய் குமார் நடித்தது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை நாயகன் அக்ஷய் குமார்: நடிப்பில் எவ்வளவுக்கு எவ்வளவு பேசப்பட்டாரோ அதே அளவு சர்ச்சைகளில் சிக்கியும் அக்ஷய் குமார் பேசப்படுவதுண்டு. உடலுக்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா விளம்பரத்தில் அவர் நடித்ததன் மூலம் மிகப்பெரிய எதிர்வினையை சமீபத்தில் அக்ஷய் சந்தித்தார். இதனையடுத்து அதுகுறித்து மன்னிப்பு கேட்ட அக்ஷய், “ரசிகர்களின் எதிர்ப்பு அலை எனக்கு நன்றாக புரிகிறது. இனிமேல் புகையிலை பொருள்களின் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன்” என தெரிவித்திருந்தார்.
படே மியான் சோட்டே மியான்: அவரது நடிப்பில் கடைசியாக ஓஎம்ஜி 2 படம் வெளியானது. தற்போது படே மியான் சோட்டே மியான் உருவாகியிருக்கிறது. இந்த சூழலில் படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், படே மியான் சோட் மியான் உருவகியிருக்கிறது. ஆக்ஷன் படமான இந்த படத்தில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் முதல் முறையாக ஒன்றாக நடித்துள்ளனர்.
பல நாடுகளில் ஷூட்டிங்: மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் போன்ற பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையானதாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களை தவிர சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் மற்றும் அலயா எஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஈத் 2024 அன்று படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் டீஸரைப் பற்றி இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் பேசுகையில், “உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மிகவும் திறமையான குழுவினரைக் கொண்டு பல நாடுகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். தீவிர உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை படே மியான் சோட் மியான் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் சவாலான காட்சிகளை மிகவும் சிரமமின்றி நடித்துள்ளனர். ஈத் ஏப்ரல் 2024 அன்று இந்த படத்தை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக பெரிய திரைகளில் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.
படம் குறித்து தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி கூறுகையில், “டீஸர் ஒரு உண்மை கதையை பெரிய ஆக்ஷன் ஹீரோக்களான அக்ஷய் மற்றும் டைகர் ஷ்ராஃப் ஆகியோரை வைத்து சொல்லப்பட்டுள்ளது. கூடுதலாக, பிருத்விராஜ் ஒரு ஆச்சரியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தகைய ஆக்ஷன் ஹீரோக்களை எங்கள் படத்தில் கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அலியின் மேஜிக் மீண்டும் ஒருமுறை நன்றாக வந்துள்ளது. ரசிகர்கள் எங்கள் குழுவின் அர்ப்பணிப்பையும், இந்த படத்தில் நாங்கள் எடுத்த முயற்சிகளையும் பாராட்டுவார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.