கிரிக்கெட் அணியை வாங்கிய நடிகர்கள்
கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் அடுத்த கட்டம் ‘ஸ்ட்ரீட் பிரிமியர் லீக்’. ஒரு ஸ்டேடியத்தின் எல்லைக்குள் அமைக்கப்பட்ட டென்னிஸ் பந்து மூலம் விளையாடப்படும் டி10 கிரிக்கெட் போட்டி.
ஐபிஎல் கிரிக்கெட் போன்றே இதற்கும் தனித்தனி அணிகள் உண்டு. தனித்தனி உரிமையாளர்கள் உண்டு. இதில் ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம் சரண் வாங்கி உள்ளார். அக்ஷய் குமார் ஸ்ரீநகர்(காஷ்மீர்) அணியையும், ஹிர்த்திக் ரோஷன் பெங்களூரு அணியையும், அமிதாப்பச்சன் மும்பை அணியையும் வாங்கி உள்ளனர்.
இது நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் முதல் சீசன் 2024ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி முதல் முதல் 9ம் தேதி வரை இந்தியாவின் முக்கியமான நகரங்களான மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கோல்கட்டா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் 6 அணிகளுக்கு இடையேயான 19 போட்டிகளாக நடைபெறுகிறது.ஐதராபாத் அணியின் உரிமையாளர் ராம் சரண் இதுகுறித்து கூறும்போது ” ஐஎஸ்பிஎல் இன் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இது கிரிக்கெட் சார்ந்த பொழுது போக்கை மறுவரையறை செய்வதை உறுதியளிக்கிறது. ஐதராபாத் எப்போதும் விதிவிலக்கான கிரிக்கெட் திறமையாளர்களின் மையமாக இருந்து வருகிறது. இந்த லீக் போட்டி எங்களுடைய உள்ளூர் வீரர்களுக்கு தேசிய அளவிலான அரங்கத்தில் பிரகாசிக்க ஒரு அருமையான தளத்தை வழங்குகிறது. ஐதராபாத் அணியை வழிநடத்தவும், நகரத்தின் கிரிக்கெட் திறமையை இது போன்ற பெரிய போட்டிகளில் வெளிக்கொணரவும் நான் உற்சாகமாக இருக்கிறேன்” என்றார்.