75வது குடியரசு தின விழா – பிரதமர் மோடி அணிந்திருந்த டர்பனின் பின்னணி!
புதுடெல்லி: கடந்த ஆண்டு குடியரசு தின விழாவின்போது, உத்தராகண்ட் மற்றும் மணிப்பூரின் வரலாறுகளை குறிக்கும் வகையிலான தலைப்பாகையை அணிந்திருந்த பிரதமர் மோடி, இந்த ஆண்டு பல வண்ண நிறம் கொண்ட தலைப்பாகையை அணிந்திருந்தார்.
75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவரால் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் கர்தவ்ய பாதையில் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பை தொடங்கிவைத்த குடியரசுத் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
போர் நினைவிடத்தில் அஞ்சலி: முன்னதாக, டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்த குறிப்பேட்டில் பிரதமர் மோடி தனது அஞ்சலிக் குறிப்பினை பதிவிட்டார். தொடர்ந்து அங்கிருந்து குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் கர்தவ்ய பாதைக்கு சென்றார்.
ஆண்டுதோறும் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியின் உடைகள் மற்றும் அவர் அணிந்துவரும் வண்ணமயமான தலைப்பாகை கவனம் பெறும். கடந்த 9 ஆண்டுகளாக தனித்துவமான தலைப்பாகையை அணிந்து வருவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார் அவர். கடந்த ஆண்டு, உத்தராகண்ட் மற்றும் மணிப்பூரின் வரலாறுகளை குறிக்கும் வகையிலான தலைப்பாகையை அணிந்திருந்தார். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி அணிந்து வந்திருந்த பல வண்ண நிற தலைப்பாகை கவனம் ஈர்க்க தவறவில்லை. வெள்ளை நிற ‘குர்தா-பைஜாமா’ உடன் அடர் பழுப்பு நிற ஜாக்கெட்அவர் அணிந்திருந்த தலைப்பாகை ராஜஸ்தானி பாந்தனி வகை தலைப்பாகை எனக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இந்தியாவின் பன்முகத்தன்மையை குறிக்கும் வகையில் இந்த ராஜஸ்தானி பாந்தனி வகை தலைப்பாகையை பிரதமர் மோடி அணிந்து வந்திருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.