ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதி – ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி.. சாதனை படைத்த சின்னர்
ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதி சுற்றில் 10 முறை சாம்பியன் ஆன ஜோகோவிச் இத்தாலி வீரர் ஜானிக் சின்னரிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். நடப்பாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் கொடிகட்டி பறந்து வருகிறார்.
கடந்த 10 முறை சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஓபனில் வென்றிருக்கிறார். 2022 ஆம் ஆண்டு மட்டும் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்பதற்காக ஜோகோவிச் அந்தத் தொடரில் பங்கேற்கவில்லை.
2019 ஆண்டு முதல் 2023 வரை ஜோகோவிச் தான் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய ஒபனில் கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஓபனில் தோல்வியை தழுவி இருக்கிறார். மெல்போர்னில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த சின்னரிடம் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே 22 வயது வீரரான ஜானிக் சின்னர் ஆக்கோரஷமாக விளையாடி ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். முதல் செட்டை ஆறுக்கு ஒன்று என்ற கணக்கில் ஜானிக் சின்னர் கைப்பற்ற இரண்டாவது செட்டையும் 6க்கு 2 என்ற கணக்கில் வென்று இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். எனினும் மூன்றாவது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய ஜோகோவிச் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
எனினும் மூன்றாவது செட்டு 6க்கு 6 என்ற கணக்கில் சென்றதால் டை பிரேக் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஜோகோவிச் தன்னுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த செட்டை கைப்பற்றினார். இந்த நிலையில் ஜோகோவிச் தன்னுடைய ஃபார்மை மீட்டு கடைசி செட் வரை ஆட்டத்தை கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 22 வயதான ஜானிக் சின்னர் நான்காவது செட்டை 6 க்கு 3 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோக்கவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் 6க்கு 1, 6க்கு 2, 6 க்கு7, 6 க்கு 3 என்ற கணக்கில் வென்ற சின்னர் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார். இந்த போட்டி 3 மணி நேரம் 22 நிமிடம் வரை நீடித்தது. கிட்டத்தட்ட 2195 நாட்களுக்குப் பிறகு ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஓபனில் தோல்வியை தழுவி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.