ஒரு மாதத்தில் அரசியல் கட்சி.. அடிமட்ட தொண்டர்களுக்கு பொறுப்பு.. மாஸ் காட்டும் விஜய்.. அடுத்த மூவ் என்ன?

தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளிடம், நடிகர் விஜய் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் எதிரொலியாக ஒரு மாதத்தில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கலாம் என்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.அரசியலுக்கு வருவதற்கான அடுத்தடுத்த நகர்வுகளை கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய் மேற்கொண்டு வந்த நிலையில், சென்னை அடுத்த பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில், நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் சுமார் 150 பேர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பேசிய விஜய், முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தொடர்பாக மிக ஆழமாக பேசியதாகவும் குறிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் அடித்தளத்தை வலுவாக கட்டமைக்க வேண்டும் என கூறியதாகவும் தெரிகிறது.

அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பதற்கான அடுத்தடுத்த நகர்வுகளை கடந்தாண்டு முதலே விஜய் தீவிரமாக முன்னெடுத்து வந்தார். குறிப்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை நேரில் வரவழைத்து, அவரது கையால் பரிசு வழங்கி கவுரவித்தார். சுமார் 12 மணி நேரம் நீடித்த இந்த நிகழ்வில், மேடையில் நின்று மாணவர்களை கவுரவித்தார். அப்போது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தனது மேடைப் பேச்சில் அறிவுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு நேரில் சென்று உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை விஜய் வழங்கினார். ஒரு அரசியல் கட்சியில் பல பிரிவுகள், அணிகள் இருப்பது போன்று தனது மக்கள் இயக்கத்திலும் பல்வேறு பிரிவுகளை விஜய் உருவாக்கி வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே, விஜய் மக்கள் இயக்கத்தின் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணிகளின் ஆலோசனைக் கூட்டங்கள், இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

ஆனால், தற்போது நடந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு நடிகர் விஜய் தலைமை தாங்கியிருப்பது, அரசியல் பார்வையாளர்களின் புருவத்தை உயர்த்தி உள்ளது. பனையூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. குறிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடலாமா அல்லது ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மாவட்டம் தோறும் இருக்கக் கூடிய மக்கள் இயக்கத்தின் அடிமட்ட தொண்டர்களுக்கு பொறுப்பு வழங்கவும், விஜய் மக்கள் இயக்கத்திற்கான நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் என்றும் விஜய் உத்தரவிட்டதாக தெரிகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *