கேந்திரியா வித்யாலயா பள்ளி பெண்கள் பாத்ரூமில் கேமிரா… மாணவிகள் அதிர்ச்சி.. சிவகங்கையில் பரபரப்பு
சிவகங்கை அருகே செயல்பட்டு வரும் கேந்திரியா வித்யாலயா பள்ளி பெண்கள் கழிவறையில் கேமரா இருந்ததால் மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே இலுப்பக்குடியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி முகாம் உள்ளது. பயிற்சி மைய வளாகத்திலேயே கேந்திரியா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. பயிற்சி மைய அதிகாரிகள், ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரின் குழந்தைகள் இங்கு கல்வி பயில்கின்றனர்.
இந்த பள்ளியில் 1 முதல் 8 வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வரும் இந்த பள்ளியின் முதல்வராக தினகரன் உள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாணவிகள் கழிவறையில் அலை பேசி கேமரா ஒன்று ஆன் செய்யப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனை கண்ட மாணவிகள் அதிர்ச்சியடைந்து முதல்வரிடம் தகவல் சொல்லியுள்ளனர்.
முதல்வர் அந்த கேமராவை கைப்பற்றி பூவந்தி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து, எஸ்.பி., அரவிந்தன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கேமரா எப்படி வந்தது யார் வைத்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.