குடியரசு தினத்தில் மாஸ் அறிவிப்பு.. பாதுகாப்பு துறை உற்பத்தியில் இறங்கும் JSW குரூப்..!
இந்திய வர்த்தகத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் JSW Group சமீபத்தில் ஆட்டோமொபைல் துறையில் இறங்கி ஓடிஷா-வில் 40000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்வதாக அறிவித்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
இந்த நிலையில் அடுத்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.JSW குழுமம் வியாழக்கிழமை, ஆஃப்-ரோட் வாகன நிறுவனமான Gecko Motors நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கான பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் பங்கு முதலீட்டின் வாயிலாக JSW Group பாதுகாப்பு உற்பத்தித் துறையில் அதிகாரப்பூர்வமாக நுழைகிறது. JSW குழுமத்தின் கிளை நிறுவனமான JSW Defense எனப்படும் JSW Defense and Aerospace நிறுவனம் Gecko Motors இல் 51% பங்குகளை வாங்கியுள்ளது, இதன் மூலம் இந்த நிறுவனம் தற்போது JSW Gecko Motors என மறுபெயரிடப்பட்டுள்ளது என்று JSW நிறுவன அறிக்கையில் தெரிவித்துள்ளது.JSW கெக்கோ மோட்டார்ஸ் நிறுவனத்தை அதன் நிறுவனர் ஜஸ்கிரத் சிங் நாக்ரா தலைமையில் தொடர்ந்து நிர்வாகம் செய்யப்படும்.
கெக்கோ நிறுவனம் ஏற்கனவே ATOR N1200 என்ற 96 ஸ்பெஷலிஸ்ட் மொபிலிட்டி வாகனங்களை (SMVs) தயாரிக்க 250 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.இந்த வாகனங்கள் தற்போது சண்டிகரில் தயாரிக்கப்படுகின்றன, ஜூன் 2024க்கான டெலிவரி செய்யப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
JSW Gecko இனி JSW Defence இன் துணை நிறுவனமாகச் செயல்படும்.இந்திய பாதுகாப்புத் துறைக்குத் தேவையான பல கட்டமைப்புகளை அதிகளவில் வெளிநாட்டில் இருந்து மட்டுமே வாங்கும் சூழ்நிலை கடந்த 10 வருடத்தில் பெரிய அளவில் மாறியுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியா தற்போது பல நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய ராணுவ கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.
இதனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் குறைந்துள்ளது.இதுகுறித்து பார்த் ஜிண்டால் கூறுகையில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை பட்ஜெட் 73.8 பில்லின் டாலர், 2030-க்குள் இது 200 பில்லியன் டாலர் வரையில் உயர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இந்த உயர்வில் இந்திய பாதுகாப்புத் துறை உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளது.