சீதா தேவி வீற்றிருக்கும் அயோத்தி கனக் பவன் பற்றி தெரியுமா?
அயோத்தியில் அருளும் ஸ்ரீராமர் மற்றும் அனுமன் தரிசனத்துக்குப் பிறகு, சீதா தேவி வீற்றிருக்கும், ‘கனக் பவன்’ என்றும், ‘சோனே கா கர்’ என்றும் அழைக்கப்படும் தங்க மாளிகைக்கு நிகராக சன்னிதியை தரிசிக்க வேண்டியது அவசியம்.
பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் இந்த இடமும், கட்டடமும் ஸ்ரீராமரை திருமணம் செய்து, அயோத்தி வந்த சீதைக்கு கைகேயி தனது பரிசாக வழங்கியதாகும்.
தசரதன் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான விஸ்வகர்மாக்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாளிகைக்கு ஸ்ரீராமர் மட்டுமே வருவதற்கு அனுமதி உண்டாம். இந்த மாளிகையின் பிரதான இடமான வெள்ளி கர்ப்பகிரகத்தில் தங்க கிரீடம் அணிந்த கோலத்தில், சீதா தேவியும், ஸ்ரீராமரும் வீற்றிருந்து, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இராமாயணக் காலத்தில் பொலிவோடு விளங்கிய இந்த மாளிகை, நாளடைவில் சிதிலமுற்றது. பிற்காலத்தில் அதை விக்ரமாதித்திய மன்னர்தான் முதன் முதலில் எடுத்துக் கட்டினார். அதன்பின் இதை பழைய பொலிவுடன் 1891ம் ஆண்டு சீரமைத்தவர் ராணி விருஷ்பானு குன்வாரியாவார்.
Kanak Bhavan
சீதா தேவியின் மாளிகையாக இருந்த கனக் பவன், தற்போது ஸ்ரீராமர் மற்றும் சீதையை வழிபடும் கோயிலாக மாறிவிட்டது. ஆண்டு முழுதும் திறந்து இருக்கும் இம்மாளிகையை பக்தர்கள் காலை 5 மணி முதல், இரவு 10 மணி வரை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. ஸ்ரீராமர் கோயிலுக்கு அருகிலேயே இது உள்ளது. கனக் பவனை தரிசனம் செய்துவிட்டு திரும்புபவர்களுக்கு பிரசாதமும் இங்கு வழங்கப்படுகிறது.