75 வது குடியரசு தின விழா: டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
75வது குடியரசு தின விழா விழாவையொட்டி, தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை பறக்கவிட்டார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். கடமைப் பாதையில் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் தொடங்கிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முன்னதாக, டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்த குறிப்பேட்டில் தனது அஞ்சலிக் குறிப்பினை பதிவிட்டார். தொடர்ந்து அங்கிருந்து குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் கடமைப் பாதைக்கு சென்றார். குடியரசு தின விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வண்ணமயமான தலைப்பாகையுடன் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தார். பிரதமரைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் அவரது மனைவியுடன் விழாவுக்கு வருகை தந்தார்.
75வது குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக பங்கேற்க வருகை தந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தன்னுடன் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவர் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
இந்த குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் ராணுவக்குழுவும் பங்கேற்றிருக்கிறது. டெல்லி குடியரசு தின விழாவில் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இடம் பெற உள்ளன.
40 ஆண்டுகளில் இந்திய குடியரசு தலைவர், குடியரசு தின நிகழ்ச்சிக்கு சாரட் வண்டியில் வந்து பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் நாட்டின் பெண்களின் சக்தி மற்றும் ஜன நாயக கோட்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டன. சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக முப்படைகளில் உள்ள பெண் படைப் பிரிவினர் பங்கேற்றிருக்கின்றனர். ராணுவத் தளவாடப் பிரிவில் முதல்முறையாக பணியமர்த்தப்பட்ட 10 பெண் அதிகாரிகளில் தீப்தி ராணா, பிரியங்கா செவ்டா ஆகியோர் பினாகா ராக்கெட் அமைப்பு மற்றும் குண்டுகளைக் கண்டறியும் ரேடார் அமைப்புடன் பங்கேற்றனர்.
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி கம்பீரமாக இடம் பெற்றது. மனுநீதி சோழனின் குடவோலை முறை, உத்திரமேரூர் கல்வெட்டு, மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவை காட்சி படுத்தப்பட்டன.