கருவளையம் இருக்கா? அப்ப நைட் தூங்கும் போது பாலுடன் இத கலந்து தடவுங்க… சீக்கிரம் மறையும்…
Dark Circles In Tamil: தற்போது நிறைய பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சந்திக்கும் ஒரு அழகு பிரச்சனை தான் கருவளையம்.
இந்த கருவளையமானது தூக்கமின்மை, நீரிழப்பு, கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை செய்வது, இரவு நேரங்களில் கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் மொபைலை அதிகம் பயன்படுத்துவது போன்ற பல காரணங்களால் வரலாம்.
இந்த கருவளையம் இருந்தால், அது ஒருவரது முக அழகையே கெடுத்துவிடும். உங்களுக்கும் இப்படி கருவளையம் உள்ளதா? அந்ந கருவளையத்தைப் போக்க சிறந்த வழிகளை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? கடைகளில் கருவளையங்களைப் போக்கும் ஏராளமான க்ரீம்கள் விற்கப்படுகின்றன.
ஆனால் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தினால், அது சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தலாம். எனவே கருவளையங்களைப் போக்க எடுத்தவுடன் க்ரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு ஐ மாஸ்க்குகளைப் போடுங்கள். கீழே கருவளையங்களைப் போக்கும் சில ஐ மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தேங்காய் எண்ணெய் ஐ மாஸ்க்
அனைவரது வீட்டிலும் இருக்கும் ஒரு பொதுவான பொருள் தான் தேங்காய் எண்ணெய். இந்த தேங்காய் எண்ணெயே கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கும். அதற்கு சிறிது தேங்காய் எண்ணெயை கையில் எடுத்து, கண்களைச் சுற்றி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், கருவளையங்கள் விரைவில் மறைவதைக் காணலாம்.
பாதாம் ஐ மாஸ்க்
பாதாம் எண்ணெய் சருமத்திற்கு நல்ல ஈரப்பதமூட்டும் எண்ணெய்களுள் சிறந்தது. இப்படிப்பட்ட பாதாம் எண்ணெயை தினமும் இரவு தூங்கும் முன் கண்களுக்கு பயன்படுத்தினால் கருவளையங்களைப் போக்கலாம். அதற்கு பாதாம் எண்ணெயுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, அதை கண்களைச் சுற்றி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
ரோஸ் வாட்டர் ஐ மாஸ்க்
அதிகமாக கம்ப்யூட்டரில் வேலை செய்து உங்கள் கண்கள் சோர்ந்திருந்தால், அந்த கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க ரோஸ் வாட்டர் பெரிதும் உதவி புரியும். அதற்கு ஒரு காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து, அதை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்தால், கருவளையங்கள் மறைவதோடு, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
பால் மற்றும் பேக்கிங் சோடா ஐ மாஸ்க்
பால் சருமத்தை ஈரப்பதமூட்டுவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதில் சிறந்தது. அப்படிப்பட்ட பாலுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து பேஸ்ட் செய்து, அதை சிறிது நேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, பின் அதை கண்களைச் சுற்றி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், கருவளையங்கள் மெதுவாக மறைவதைக் காணலாம்.
டீ பேக் ஐ மாஸ்க்
கருவளையங்களைப் போக்குவதில் டீ பேக் மிகச்சிறந்த ஒன்று. அதற்கு டீ தயாரிக்க பயன்படுத்திய டீ பேக்கை, ஃப்ரிட்ஜ்ஜில் 5-10 நிமிடம் வைத்து, அதன் பின் அதை கண்களின் மேல் 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால், கருவளையங்கள் வேகமாக மறையும். அதோடு கண்களில் உள்ள வீக்கமும் குறையும்.
வெள்ளரிக்காய் ஐ மாஸ்க்
கருவளையங்களைப் போக்க பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் வெள்ளரிக்காய். ஏனெனில் வெள்ளரிக்காய் குளிர்ச்சி பண்புகளைக் கொண்டது. இந்த வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதை 30 நிமிடம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, அதன் பின் அந்த வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் தொடர்ந்து செய்து வந்தால், கருவளையங்கள் வேகமாக மறையும்.