காரிலும் கேமரா முக்கியம்.. விபத்துகளின் போது உதவியாக இருக்கு டேஷ் கேமராக்கள்.. பலன்கள் என்னென்ன?

வாகனங்கள் பெருகி வரும் நிலையில், சாலை பாதுகாப்பு என்பது முக்கிய விவாதப் பொருளாக உள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தை (IPC) மாற்றியமைக்கும் பாரதீய நியாய் சன்ஹிதாவின் (BNS) கீழ், அலட்சியமாக வாகனம் ஓட்டி கடுமையான சாலை விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்கள், காவல்துறை அல்லது துறை சார்ந்த அலுவலர்களுக்கு தெரிவிக்காமல் தப்பிவிடுவதால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இருப்பினும், கனரக வாகன ஓட்டுநர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், இந்த விதிகள் தளர்த்தப்பட்டன. இந்த சூழலில் தான் விபத்துகளின் போது துரித நடவடிக்கை எடுக்க உதவும், டேஷ் கேமராக்கள் (dashcam) குறித்து நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

இன்று பல பிரீமியம் வாகனங்களில் அதனுடனே வரும் இந்த கேமராக்கள், நாம் வாகனத்தை செலுத்தும்போது முன்பக்கம் தெரியும் அனைத்தையும் படம்பிடித்து வைத்திருக்கும். இதில் 360 டிகிரி கேமராவும் சில வாகனங்களில் கொடுக்கப்படுகிறது. அவை கேபினையும் படம்பிடித்து வைத்துக் கொள்கிறது. அவசர காலங்களில் இந்த பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் நமக்கு உதவியாக இருக்கலாம். யார் தவறு செய்தார்கள் என்பதை முடிவு செய்யும் அளவுக்கு டேஷ் கேமராக்கள் சிறந்ததாக இருக்கின்றன.

வாகனங்களுடன் மட்டும் தான் இந்த டேஷ் கேமராக்கள் கிடைக்கும் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். தனியாகவும் நாம் இதை வாங்கி பொருத்தி கொள்ளலாம். இந்த டேஷ் கேமராக்களில் இருக்கும் சேமிப்புத் திறனைப் பொறுத்து காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன. தேவையில்லாத பழைய பதிவுகள் தானாக அழிக்கப்பட்டு புதிய பதிவுகளை டேஷ் கேமராக்கள் சேமிக்கின்றன. தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2024 தற்போது கடைபிடிக்கப்படுவதால், சாலைகளில் ஆபத்தை ஏற்படுத்திச் செல்லும் வாகனங்களை கண்டறிய உதவும் இந்த டேஷ் கேமராக்களின் பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

– உங்கள் வாகனம் சம்பந்தப்பட்ட எந்தச் சம்பவத்திற்கும் சான்றாக டாஷ்கேம் செயல்படுகிறது. நீங்கள் ஏதேனும் சட்டச் சிக்கலில் சிக்கினால், சரியான தேதி மற்றும் நேரத்துடன் நடந்த நிகழ்வுகளின் காட்சிகளை வைத்திருப்பது அவசியம். யாரேனும் உங்கள் வாகனத்தை இடித்து விட்டுச் சென்றால், டேஷ் கேமரவால் சம்பவத்தை ஏற்படுத்திய வாகனத்தின் பதிவு எண்ணைப் பிடிக்க முடியும். பின்னர் அது நீதிமன்றத்தில் சாட்சியமாக சமர்ப்பிக்கப்படலாம்.

– டாஷ்கேம் நிறுவப்பட்டால், வாகன உரிமையாளர் சாலை விதிகளை மீறும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம். டாஷ்கேம் வாயிலாக படமாக்கப்பட்ட காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது காவல்துறைக்கு எளிதாக இருக்கும்.

– சாலைகளில் பயணிக்கு ம்போது உங்கள் மீது தொடுக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராட டேஷ் கேமராவின் பதிவுகள் உதவும்.

– நீங்கள் வாகனத்தை ஓட்டும் தரம், அல்லது வாடகைக்கு விட்டிருக்கும் வாகனத்தை ஓட்டுநர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த கேமராக்கள் உதவியாக இருக்கிறது. அதேபோல முன்னோக்கி செல்லும்போது வாகனங்களின் மீது மோதும் சூழல் ஏற்பட்டால், அதற்கான எச்சரிக்கை வழங்குவது போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் டேஷ் கேமராக்கள் வழங்குகின்றன.

“ஓட்டுநராக நீங்கள் எவ்வளவு விழிப்புடன் இருந்தாலும், சாலையில் பிறர் செய்யும் தவறுகளால் அவ்வப்போது விபத்துகள் நடக்கின்றன. இந்திய சாலைகளில் செய்யாத தவறுக்காக ஏற்பட்ட வாதங்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், டேஷ்கேம்கள் பெரும்பாலான பிரச்னைகளை எளிதில் கையாள உதவுகிறது. நாளடைவில் சாலை பாதுகாப்பிற்காக டேஷ்கேம்கள் பெரும் பங்கு வகிக்கும்” என கியூபோ டேஷ்கேம்களை தயாரிக்கும் ஹீரோ எலெக்ட்ரானிக்ஸ் தலைமை செயல் அலுவலர் நிகில் ராஜ்பால் தெரிவித்துள்ளார். சந்தையில் அதிகம் விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டெர், வென்யூ, அல்கசார் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா போன்ற கார்கள் தற்போது சிறந்த டேஷ்கேமராக்களுடன் வாகனங்களை வெளியிடுகின்றன.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *