இவ்வளவு திறமையை எங்கயா வச்சிருந்த.. 50வது டெஸ்ட் போட்டி அரைசதம்.. மிரட்டல் சாதனை படைத்த கேஎல் ராகுல்

ஐதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசி இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் அசத்தியுள்ளார்.

“லேட் ப்ளூமர்ஸ்” என்ற ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை கூறுவார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மைக் ஹசியை குறிப்பிடும் அனைவரும் அவரை லேட் ப்ளூமர் என்று கூறுவார்கள். ஏனென்றால் அதிகளவிலான திறமையிருந்து மிகவும் தாமதமாக வாய்ப்பை பெற்று, உச்சத்திற்கு வந்தவர். அப்படியான ஒரு வீரராக தான் இந்திய அணியின் கேஎல் ராகுல் உருவாகியுள்ளார்.

31 வயதாகும் கேஎல் ராகுல், கடந்த ஆண்டு வரை இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பு அளித்ததில்லை. ஆனாலும் மிகக்குறைந்த வயதிலேயே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் என்று வெளிநாடுகளில் சதம் விளாசியவர். விராட் கோலியால் பேக் அப் செய்யப்பட்ட கேஎல் ராகுல், ஒரு கட்டத்தில் விராட் கோலி அணியிலேயே தேர்வு செய்யப்படாமல் நீக்கப்பட்டார்.

ஆனால் ஐபிஎல் தொடரில் அடைந்த காயத்தின் போது, அவர் தன்னை மீட்டு கொண்டு வந்துள்ளார். ஆசியக் கோப்பையில் தொடங்கிய கேஎல் ராகுலின் வெற்றிப் பயணம் அடுத்தடுத்து உச்சத்தை தொட்டு வருகிறது. விக்கெட் கீப்பிங், டிஆர்எஸ், கேப்டன்சி, மிடில் ஆர்டர் வீரர் என்று எந்த பொறுப்பை கொடுத்தாலும் அமர்க்களப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகினார். இதனால் விராட் கோலி இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்று பார்க்கப்பட்ட நிலையில், கேஎல் ராகுல் முன் வந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டின் 4வது வரிசையில் கேஎல் ராகுல் இதுவரை பேட்டிங் செய்த அனுபவமே கிடையாது.

ஆனாலும் இந்திய அணிக்காக தனது 50வது போட்டியில் 4வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார் கேஎக் ராகுல். தொடக்கம் முதலே எந்தவித பதற்றமும் இல்லாமல் தேவையான பந்துகளை பவுண்டரி விளாசி சீராக ரன் குவித்து வந்தார். மார்க் வுட் பவுன்சர் பந்துகளை வீசி அச்சுறுத்த முயன்ற போது, புல் ஷாட்டை கீழ் நோக்கி அடித்து எளிதாக பவுண்டரியாக்கினார்.

சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 72 பந்துகளிலேயே அரைசதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் விளாசும் 14வது அரைசதம் இதுவாகும். அதேபோல் 50வது டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசிய 14வது இந்திய வீரர் என்ற பெருமையையும் கேஎல் ராகுல் பெற்றுள்ளார். விராட் கோலியின் இடத்தில் களமிறங்கினாலும் அசத்தலான ஆட்டத்தை ஆடி வரும் கேஎல் ராகுலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *