இந்திய அணிக்கு குழி பறிக்கும் இளம் வீரர்.. ஆதரிக்கும் ரோஹித் சர்மா.. வேடிக்கை பார்க்கும் பிசிசிஐ
மற்ற வீரர்கள் எல்லாம் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் அதன் பின் அவர்களுக்கு இடமே கிடையாது என கண்டிப்புடன் நடந்து கொள்ளும் பிசிசிஐ தேர்வுக் குழு, சுப்மன் கில்லுக்கு மட்டும் விதிவிலக்காக 21 டெஸ்ட் போட்டிகள் வரை வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
சுப்மன் கில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் சரியாக ரன் குவிக்கவில்லை. ஆனால், அந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்காததால் விமர்சனத்தில் இருந்து தப்பி, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடித்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் படுநிதான ஆட்டம் ஆடி தன் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார். எனினும், 66 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மீண்டும் அவர் டெஸ்ட் போட்டியில் சொதப்பி இருப்பது விமர்சனத்தை கிளப்பி உள்ளது. இந்த நிலையில் இந்திய பேட்ஸ்மேன்களிலேயே படுமோசமான சாதனை ஒன்றையும் படைத்து இருக்கிறார் சுப்மன் கில்.
21 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1000க்கும் மேல் ரன் குவித்த இந்திய பேட்ஸ்மேன்களில் மோசமான பேட்டிங் சராசரி கொண்ட வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்து இருக்கிறார் சுப்மன் கில். அவர் 21 போட்டிகளில் 38 இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்து 1063 ரன்கள் எடுத்துள்ளார். இதன் பேட்டிங் சராசரி 30.4 மட்டுமே.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சேத்தன் சவுஹான் 28.7 பேட்டிங் சராசரியுடனும், ஃபரூக் இன்ஜினியர் 29.5 பேட்டிங் சராசரியுடனும், நான்காவது இடத்தில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 31.2 பேட்டிங் சாராசரியுடனும் இடம் பெற்று இருக்கின்றனர்.
இப்படி டெஸ்ட் பேட்டிங்கில் மோசமான சாதனை படைத்து வரும் சுப்மன் கில்லை நீக்கிவிட்டு புஜாராவை மீண்டும் அணிக்கு கொண்டு வர வேண்டும் என சிலரும், சர்ஃபராஸ் கான், ரிங்கு சிங் போன்ற இளம் பேட்ஸ்மேன்களை அணியில் சேர்க்க வேண்டும் என சிலரும் கூறி வருகின்றனர்.