குடியரசு தின விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட அயோத்தி ராமர் கோயிலை மையப்படுத்திய ராமர் அலங்கார ஊர்தி!
அயோத்தியில் கடந்த 22 ஆம் தேதி புதிதாக கட்டப்படட் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராமர் கோயிலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அரசியல், சினிமா, தொழிலதிபர்கள், ரிஷிகள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தான் டெல்லியில் நடந்த 75ஆவது குடியரசு தின ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசத்தை பிரதிபலிக்கும் வகையில் ராமர் ஊர்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 75ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்பு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், சிறப்பு விருந்தினராக வருகை தந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர்.
இன்று காலை 10.30 மணிக்கு ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் போர் விமானங்கள், பீரங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், விழாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. இதில், உத்தரப்பிரதேச மாநிலம் சார்பில் ராமர் அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தப்பட்டது. வில் அம்புடன் குழந்தை வடிவ ஸ்ரீ ராமர் நிற்பது போன்ற காட்சி அந்த அலங்கார ஊர்தியில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு அந்த மாநில பாடல்களும் ஒலிக்கப்பட்டது. நடன கலைஞர்கள் நடனமாடியபடி அணிவகுத்து சென்றனர்.