75ஆவது குடியரசு தின விழாவில் தமிழகத்தை பறைசாற்றும் குடவோலை முறை அலங்கார ஊர்தி அணிவகுப்பு!
டெல்லியில் நாட்டின் 75ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்பு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், சிறப்பு விருந்தினராக வருகை தந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர்.
இன்று காலை 10.30 மணிக்கு ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் போர் விமானங்கள், பீரங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த குடியரசு தின விழாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. இதில், தமிழ்நாட்டின் சார்பில் குடவோலை முறை காட்சிப்படுத்தப்பட்டது. இதில் பாடல்கள், பாரம்பரிய வடிவமைப்புடன் கூடிய அலங்கார காட்சிகள் எல்லாம் மக்களை ரசிக்கும் கவரும் வகையில் இருந்தது.
குடவோலை முறை என்பது தேர்தல் நடைமுறையை விளக்கும் வகையில் இந்த விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. குடவோலை முறை என்பது, மக்கள் தகுதியானவர்களை தேர்வு செய்ய அவர்களது பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதி போட்டு, ஒரு குழந்தையை வைத்து குலுக்கல் முறையில் தேர்வு செய்வார்கள். இந்த குடவோலை முறையானது சோழர்களின் ஆட்சி காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.