பழைய வீட்டை விற்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்!
பழைய வீடுகளை விற்பனை செய்ய சரியான சந்தை நிலவரப்படி தொகை நிர்ணயிக்கப்பட்டாலும் அவற்றை எளிதாக விற்பனை செய்துவிட முடியாது என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் கூறுகின்றனர்.விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பழைய வீட்டை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இத்தகைய பழைய வீட்டை வாங்கும் போது, அது தொடர்பான பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உங்களிடம் உள்ள பழைய வீட்டை விற்றுவிட்டு, புதிய வீட்டை வாங்குவதாக இருந்தால் அதில் மிக கவனமாக இருக்க வேண்டும். பழைய வீட்டை பயன்பாட்டு நிலையில் அப்படியே விற்பதில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். பொதுவாகவே, நாம் ஒரு பொருளை வாங்க சென்றால் அதற்கு விலை அதிகமாகவும், அதே பொருளை விற்க சென்றால் அதற்கான விலை குறைவாகவும் மதிப்பிடப்படுகிறது.
இது பலருக்கும் நேரடிய அனுபவமாக இருக்கிறது. இதனால், நீங்கள் விற்கும் பழைய வீட்டில் சிறிய அளவிலான குறைபாடுகள் இருப்பின் அதை சரி செய்ய வேண்டியது அவசியம். சில ஆயிரம் ரூபாயில் சரி செய்யக் கூடிய சிறிய உடைப்பாக இருக்கலாம். ஆனால், அதை சரி செய்யாவிட்டால், விற்பனையின் போது, சில லட்சங்கள் குறைத்து மதிப்பிடப்படும்.
எனவே, வீட்டை விற்கும் முன், எந்த ஒரு வீட்டுக்கும் வெளிப்புற தோற்றம் கண்ணை கவரும் விதத்தில் இருக்க வேண்டும் பொதுவான விதிமுறை. அதனால், சற்றே மங்கலாக தோற்றமளிக்கும் வீடுகள் குறைத்து மதிப்பிடப்படும். அதனால், தகுந்த எக்ஸ்டீரியர் பெயிண்டு மூலம் சற்று குறைவான பட்ஜெட்டில் வெளிப்புற தோற்றத்தை அழகாக மாற்றுவது அவசியம். அதில் சிறு உடைப்புகள், சிறு விரிசல்கள் இருந்தால் சரி செய்து விடுங்கள்.
மேலும், கதவு, ஜன்னல் போன்றவற்றில் துரு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் வினியோக குழாய் உடைப்புகளை சரி செய்யுங்கள். மின்சார இணைப்பு உடைப்புகளையும் சரி செய்யுங்கள். வீட்டின் அனைத்து பகுதியிலும் புதிய பெயிண்ட் அடித்து இருப்பதும் நல்லது.
மேலும், விற்பனைக்கு முன் சொத்து வரி, குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் ஆகியவை நிலுவை இல்லாமல் கட்டிவிடுங்கள். விற்பனைக்கு முன், அதை வாங்குவோருக்கு தேவையான ஆவணங்களை தொகுப்பாக எடுத்து வைத்துக்கொள்வதுடன், சில பிரதிகளை நகல் எடுத்து வைப்பதும் நல்லது. தெளிவான எந்த முடிவும் ஏற்படாமல், அசல் ஆவணங்களை வெளியாரிடம் கொடுக்காதீர். தரகர்களுடன் விற்பனைக்கான ஒப்பந்தம் போடுவது, பவர் கொடுப்பது போன்ற செயல்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
சீரமைப்பு பணிகள் சரியாக செய்து இருந்தால் அதை வாங்க வருவோருக்கு நல்ல நம்பிக்கை ஏற்படும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் துறை வல்லுனர்கள்.கவனத்திற்கு…விற்க முடிவு செய்யப்பட்ட வீட்டிலுள்ள பர்னிச்சர் வகையை, பலரும் சரியாக பராமரிக்காமல் விட்டு விடுவர். வீடு என்னதான் அழகாக இருந்தாலும், அங்கு உள்ள பர்னிச்சர் குறைபாடுள்ளதாகவோ, பழுதடைந்த நிலையிலோ இருப்பதை வீடு வாங்க வருபவர்கள் விரும்ப மாட்டார்கள். அதுபோன்ற எண்ணம் காரணமாக விலையை குறைவாக மதிப்பிடவும் வாய்ப்புள்ளது. வீட்டு வரி, தண்ணீர் வரி போன்றவற்றில் நிலுவைகள் இல்லாமலும், வீடு சம்பந்தமான தாய் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சரியான நிலையில் இருப்பதை பலரும் நேர்மையான அணுகுமுறையாக கருதுகின்றனர். அவற்றை சரியான முறையில் கைகளில் வைத்திருப்பது பல நன்மைகளை அளிக்கும்.