இதெல்லாம் புது சிக்கல்.. தரம் குறைந்த கூகுள் தேடலின் தரம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
எஸ்.இ.ஓ. ஸ்பேம், தொடர்பு சந்தைப்படுத்துதல் (Affiliate Marketing), தரம் குறைந்த தகவல் உள்ளடக்கங்கள் (Contents) உள்ளிட்டவற்றால் கூகுள் தேடலின் தரம் குறைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த லீப்ஸிக், பவுஹாஸ் பல்கலைக் கழகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வு அமைப்புகள் உள்ளிட்டவை இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. ஓராண்டாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கூகுள், பிங் உள்ளட்ட தேடுதல் பொறிகளில் உள்ள கன்டென்டுகள் சோதித்து பார்க்கப்பட்டது.
இந்த ஆய்வில் எஸ்.இ.ஓ. (Search Engine Optimization) ஸ்பேம், தொடர்பு சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை தேடுதல் பொறிகள் காட்டும் தகவல் உள்ளடக்கங்களை (Contents) பாதித்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக Affiliate Marketing எனப்படும் தொடர்பு சந்தைப்படுத்துதல் காரணமாக உள்ளடக்கங்களின் தரம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது என ஆய்வறிக்கை கூறுகிறது.
இதுபோன்ற உள்ளடக்கங்கள், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருட்களை பயனர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இதன் காரணமாக பயனர்கள் தேடும் தகவல்களுக்கு பதிலாக அவர்களுக்கு கொஞ்சம் தொடர்பில்லாத தகவல்கள் திணிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
கூகுள் தேடலில் பெறப்படும் ஒரு சில இணையதள லிங்க்குகள் மட்டுமே பயனர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை அளிப்பதாக வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் பெரும்பாலான இணையதள லிங்க்குகள் SEO Spam, Affiliate Marketing போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, பயனர்களுக்கு அதிகம் தேவைப்படாத இணையதள லிங்க்குகளை சர்ச் என்ஜினில் வழங்குகின்றன.
சர்ச் எஞ்சின் ஆப்டிமைசேஷன் எனப்படும் எஸ்.இ.ஓ.க்கள் காரணமாக பயனர்கள் தேடும் தகவல்களுக்கு பதிலாக Affiliate Marketing பொருட்களை தேடுதல் பொறியில் முதலில வந்து காட்டுகின்றன. இதனால் பயனர்களுக்கு சரியான தகவல்கள் கிடைக்காமல் போகிறது.
தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், வருங்காலத்தில் இந்த பாதிப்புகள் இன்னும் அதிகரிக்க கூடும். இதுபற்றி துறை சார்ந்த வல்லுனர்கள் மேலும் சில ஆய்வுகளை மேற்கொண்டு, பயனர்களுக்கான சரியான தகவல்களையும், உள்ளடக்கங்களின் (Contents) தரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.