வேலையை விட்டு போங்க – ஊழியர்களுக்கு நெருக்கடி தரும் அமேசான்..!? அதிர்ச்சி தகவல்கள்
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்திலும் ஊழியர்களின் வருகை, அவர்களின் பணித்திறன், ஒழுக்கம், குழு ஒத்துழைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வருடாந்திர மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஊதிய உயர்வு, பணி உயர்வு போன்ற விஷயங்களை முடிவு செய்வது வழக்கம். ஊழியர்கள் மீது பாரப்பட்சம் காட்டாமல் அவரவர் திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு ஏற்றபடி பலன்கள் சென்றடைய வேண்டும் என்ற வகையில் இதுபோன்ற விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால், அமேசான் நிறுவனத்தில் ஊழியர்களின் பதவி உயர்வு நடவடிக்கைக்கு தடை போடும் விதமாக, அவர்களுக்கான பணித்திறன் மதிப்பெண்களை குறைத்து வழங்குமாறு மேலாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
அமேசான் நிறுவனத்திற்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில் ஊழியர்களை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும், முறைப்படி நோட்டீஸ், பணிநீக்கம், பணிநீக்க பலன்கள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பல்வேறு வகையில் ஊழியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அவர்களை தாமாகவே வேலையை விட்டுச் செல்லும் நிலைக்கு ஆளாக்குவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அமேசான் நிறுவனம் குறித்து இதுபோன்ற சர்ச்சை தொடங்கி விட்டது. அமேசான் நிறுவனத்தில் குறிப்பிட்ட ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணி செய்கின்றனர். அவர்களை வாரம் மூன்று நாட்களாவது அலுவகத்திற்கு நேரில் வந்து பணி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை கடைப்பிடிக்குமாறு அமேசான் அறிவுறுத்தியது.
அதேபோல, அமேசான் நிறுவனத்தின் தனித்தனி செயல்பாடுகளுக்கு தகுந்தபடி பிராந்திய அலுவலகங்களில் வேலை செய்பவர்களும் உண்டு. அவர்கள் அனைவரையும், ஹப் என்று சொல்லக் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுமாறு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அமேசான் நிறுவனம் அறிவுறுத்தியது. இவ்வாறு கடுமையான நிபந்தனைகளை அமேசான் விதிக்கும் நிலையில், அதைக் கடைப்பிடிக்க தவறுகின்ற ஊழியர்கள் தாமாகவே வேலையை விட்டுச் செல்ல வேண்டும் என்ற நிர்பந்த சூழல் உருவாக்கப்படுவதாகத் தெரிகிறது.
வருகைப் பதிவு கொள்கையை பின்பற்றாத ஊழியர்கள் அனைவருக்கும் குறைவான திறன் மதிப்பெண் வழங்குமாறு மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். ஒருங்கிணைந்த அலுவலகத்திற்கு வர முடியாதவர்களிடம் பணியை ராஜினாமா செய்யுமாறு வாட்ஸ்அப், ஸ்லேக் போன்ற மெசேஜிங் தளத்தின் மூலமாக அறிவுறுத்தப்படுகிறதாம். ஆக, பணிநீக்க நடவடிக்கைகளில் குறைந்தபட்ச மரியாதையை கூட கடைப்பிடிப்பதில்லை என்று அமேசான் ஊழியர் ஒருவர் குற்றம்சாட்டினார்.
அதே சமயம், தங்கள் தரப்பு நடவடிக்கையை அமேசான் நிறுவனம் நியாயப்படுத்துகின்றது. இதுகுறித்து அமேசான் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “ஊழியர்கள் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து வாரத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டியிருக்கும் என்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே நாங்கள் அறிவுறுத்தி விட்டோம். எங்கள் வாடிக்கையாளர்கள், வணிகம் மற்றும் அலுவலக பணிக் கலாச்சாரம் ஆகிய அனைத்து தரப்புக்கும் இதுதான் நல்லது’’ என்று தெரிவித்தார்.
அலுவலகத்தில் ஊழியர்களிடையே காணப்படும் முனுமுனுப்பு மற்றும் வெளியில் இருந்து வருகின்ற விமர்சனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் தங்கள் முடிவை செயல்படுத்துவதில் அமேசான் நிறுவனம் உறுதியாக இருப்பதைப் போலத் தெரிகிறது.