Dhoni: `10 நாள்களில் வலைப்பயிற்சி; மார்ச்சில் சேப்பாக்கம் வருகை!’ – தோனி ரீசன்ட் அப்டேட்
ஐபிஎல் 2024-ம் ஆண்டிற்கான மினி ஏலம் துபாயில் கடந்த 19- ம் தேதி அன்று நடைபெற்று முடிந்தது. அதில் ஒவ்வொரு அணிகளும் தங்களது அணிகளுக்குத் தேவையான வீரர்களை வாங்கிக் கொண்டனர்.
பெரும்பாலான ரசிகர்களுக்கு தோனி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவாரா, மாட்டாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் விளக்கமளித்திருக்கிறார். “தோனியின் கடைசி சீசன் இதுதானா? என்பது பற்றி எனக்குத் தெரியாது. அவரது ஓய்வு குறித்து அவரே அறிவிப்பார்.
அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது பற்றி எங்களிடம் தெரிவிக்கவில்லை. மூட்டு வலி அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் இருக்கிறார். தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இன்னும் 10 நாள்களில் வலைப்பயிற்சியையும் தொடங்குவார். மார்ச் முதல் வாரத்தில் எங்களது பயிற்சி முகாமை சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.” என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த சீசனிலேயே தோனிக்கு மூட்டில் காயம் ஏற்பட்டிருந்தது. போட்டிகளுக்கு முன்பும் பின்பும் காலில் கட்டு ஒன்றை கட்டிக் கொண்டுதான் தோனி பயிற்சிகளிலெல்லாம் ஈடுபட்டிருந்தார். அந்த காயத்தோடுதான் அத்தனை போட்டிகளிலும் விக்கெட் கீப்பிங்கும் செய்திருந்தார். அந்த காயம் காரணமாக அந்த சீசனுடனே தோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றுவிட்டு, “ரசிகர்கள் என் மீது பொழிந்த அன்பிற்கு நன்றி என ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட முடியும். ஆனால், அவர்களின் அன்பிற்குக் காணிக்கையாக கடினமாக உழைத்து இன்னும் ஒரு சீசனில் ஆட முயற்சி செய்யப் போகிறேன்.
அதுதான் அவர்களுக்கு நான் திருப்பிக் கொடுக்கும் சரியான விஷயமாக இருக்கும்” எனப் பேசியிருந்தார். சீசன் முடிந்த சில நாள்களிலேயே அறுவை சிகிச்சையையும் செய்திருந்தார். நவம்பர் இறுதிக்குள் முழுமையாக குணமடைந்து விடுவேன் என தோனியே ஒரு நிகழ்ச்சியிலும் கூறியிருந்தார். இந்நிலையில்தான் தோனியின் உடல்நிலை பற்றி காசி விஸ்வநாதன் அப்டேட் கொடுத்திருக்கிறார்.