இடைக்கால பட்ஜெட்டுக்கும், முழு பட்ஜெட்டுக்கும் என்ன வித்தியாசம்
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட் 2024ஐ தாக்கல் செய்யத் தயாராக உள்ளார்.
இது அவர் தாக்கல் செய்யும் ஆறாவது பட்ஜெட் ஆகும். 2019 ஆம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் நாட்டின் முதல் முழுநேர நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இருப்பினும் இந்த முறை தாக்கல் செய்வது ஒரு இடைக்கால பட்ஜெட் ஆகும். இடைக்கால பட்ஜெட்டுக்கும் முழு பட்ஜெட்டுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து இனி பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தேவையான நிதிச் செலவுகளை சமாளிப்பதற்காக தாற்காலிகமாக தாக்கல் செய்யப்படுவதுதான் இடைக்கால பட்ஜெட்.
புதிய அரசு அமையும் வரையிலான குறுகிய காலத்துக்கு தகுந்தபடி இந்த பட்ஜெட் இருக்கும்.வழக்கமாக முழு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வேளையில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆண்டில் மட்டும் ஆளும் கட்சியால் ஒரு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பின்னர் புதிய அரசால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.இந்தியாவில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இது 2024-25 நிதியாண்டில் இடையில் வருகிறது.
இதனால் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதியன்று தாக்கல் செய்ய உள்ளார்.2024 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யப்படும். அந்த பட்ஜெட்டை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் நிதி அமைச்சர் தாக்கல் செய்வார்.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதியன்று இதற்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதியன்று தொடங்குகிறது. பிப்ரவரி 9 ஆம் தேதிவரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும்.
இந்தியாவின் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019, 2020, 2021, 2022 , 2023 ஆகிய ஆண்டுகளில் ஐந்து பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். பிப்ரவரி 1, 2024 இன் பட்ஜெட் அவரது ஆறாவது பட்ஜெட் தாக்கல் ஆகும்.