2030ம் ஆண்டுக்குள் சாலை விபத்து இறப்புகளை 50% குறைக்க இலக்கு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அரசானது சாலைப் பாதுகாப்பிற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறி இருக்கிறார். 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளை 50 சதவீதம் வரை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.
தொழில்துறை அமைப்பான CII ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டின் சாலை பாதுகாப்பு குறித்து பேசினார். மேலும் நாடு முழுவதும் சாலை பாதுகாப்பை மேம்படுத்த ‘4E’யை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், சமூக நடத்தையில் உரிய மாற்றங்களை ஏற்படுத்துவதும் மிகவும் முக்கியமானது எனவும் கூறினார்.
அமைச்சர் நிதின் கட்கரி 4E என்று குறிப்பிட்டவை பின்வருமாறு:
எஞ்சினியரிங் (Engineering – ரோட் & வெஹிகிள் எஞ்சினியரிங்), என்ஃபோர்ஸ்மென்ட் (Enforcement), கல்வி (Education) மற்றும் அவசர மருத்துவ சேவை (Emergency medical service). சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதில் நாட்டில் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.
ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான சாலை மரணங்கள் பதிவாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப்பில் இருக்கிறது. அறிக்கையின்படி கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 4.6 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இந்த சாலை விபத்துகளில் 1.68 லட்சம் பேர் இறந்துள்ளனர். சுமார் 4 லட்சம் பேர் படுகாயமடைந்து உள்ளனர். இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியா முழுவதும் ஒவ்வொரு 1 மணி நேரத்துக்கும் சுமார் 53 சாலை விபத்துகள் நிகழ்வதாகவும், இதில் சுமார் 19 பேர் வரை உயிரிழப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த 2022 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 12 சதவீதமும், விபத்து இறப்புகள் 10 சதவீதமும் அதிகரித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3.14 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் 18-35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர் என்றும் கூறினார்.
விபத்துகளால் ஏற்படும் எதிர்பாராத மரணங்கள் ஒரு குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக ஆதரவளிக்கும் ஒரு நபரின் இழப்பு, ஒரு நிறுவனத்திற்கு தொழிலாளி இழப்பு என பொருளாதாரத்திற்கு கணிசமான இழப்பை ஏற்படுத்துகிறது என்று கூறினார். பாதுகாப்பான சாலைகளைத் திட்டமிடுவதில் பொறியாளர்களின் பங்கு பெருமளவு இருப்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார் நாட்டின் குடிமக்களுக்கு பாதுகாப்பான சாலைகளை அமைத்து கொடுப்பதில் பொறியாளர்கள் தங்களது முக்கிய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார். 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளை 50 சதவீதம் வரை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சாலை பாதுகாப்பு குறித்த விரிவான திட்ட அறிக்கைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் அடிக்கோடிட்டு காட்டினார். அதே போல முக்கியமாக அதிக விபத்துகள் நிகழும் பிளாக் ஸ்பாட்களை முறையாக ஆய்வு செய்து மாநில அரசுகள், நகராட்சிகள் மற்றும் பிற நிறுவனங்களை அணுகி அந்த விவரங்களை செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.