விஜயின் GOAT படத்தில் நடிக்கும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை? வைரலாகும் போட்டோ!
விஜய்யின் 68 வது படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். தாய்லாந்து, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு இதன் பெயர் மற்றும் பர்ஸ்ட், செகண்ட் லுக்குகளை வெளியிட்டனர். படத்துக்கு G.O.A.T. (Greatest Of All Time) என்று பெயர் வைத்துள்ளனர்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் நடிகர் விஜய் உடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன் யோகி பாபு, பிரேம்ஜி, சினேகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அதேபோல் வெங்கட் பிரபுவின் நண்பர்களான வைபவ், அரவிந்த் உள்ளிடவர்களும் நடிக்கின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது பட குழு பூஜை வீடியோவுடன் வெளியிட்டு உள்ளது.
விஜய் நடித்த போக்கிரி மற்றும் வில்லு ஆகிய திரைப்படங்களை பிரபுதேவா இயக்கியிருந்தார். அது மட்டும் இல்லாமல் விஜயின் பல பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்திருக்கிறார். இந்த நிலையில் முதல் முறையாக நடிகர் விஜய் உடன் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். அதேபோல் தமிழ் நடிகர்களால் மைக் மோகன் என அறியப்படும் சீனியர் நடிகரான மோகன், இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் சாக்லேட் பாய் என்ற பெயர் எடுத்த நடிகர் பிரசாந்தும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
GOAT டைம் ட்ராவல் ஜானரில் உருவாவதாக கூறப்படுகிறது. இதில் மொத்தம் இரண்டு விஜய்கள் என்றும் அதில் அப்பா விஜய்க்கு நண்பர்களாக பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் வருவார்கள் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. படத்தின் போஸ்டர்கள் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரிசையாக வெளியாகிக்கொண்டிருந்தன.
இந்நிலையில் GOAT படத்தில் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கனிகா நடிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இவர் வெள்ளித்திரையில் அஜித், மாதவன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
சமீபத்தில் வெங்கட் பிரபுவுடன் நடிகை கனிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள்தான் கனிகா விஜயின் படத்தில் நடிப்பதாக இணையத்தில் பேசி வருகின்றனர்.