டிக்டாக்கால் வெளிவந்த குழந்தை விற்பனை சம்பவம்… 19 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட ட்வின்ஸ்… பரபர சம்பவம்!
திரைப்படங்களில் கதையாக வருவதுபோன்ற காட்சிகள், கிழக்கு ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவில் நடந்துள்ளது. பிறக்கும்போது பிரிக்கப்படும் இரட்டை சகோதரிகள், 19 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைவது போன்ற ஒரு சம்பவம் நிஜத்தில் நிகழ்ந்துள்ளது.
Amy Khvitia மற்றும் Ano Sartania, ஒரே மாதிரியான இரட்டையர்கள், பிறக்கும்போதே பிரிந்துவிட்டனர். தாங்கள் இருவரும் ட்வின்ஸ் என்பது தெரியாமலேயே இருவரும் தனித்தனியாக பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென வைரலான டிக்டாக் வீடியோ ஒன்று இருவரையும் ஒன்றிணைத்துள்ளது.
பிபிசியால் வெளிகொண்டுவரப்பட்ட இரட்டையகளின் சம்பவம், ஜார்ஜியாவைப் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்னையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக கூறுகின்றனர். பல ஆண்டுகளாக மருத்துவமனைகளில் இருந்து திருடப்பட்டு விற்கப்பட்ட குழந்தைகளின் ஆபத்தான எண்ணிக்கை, பெரும்பாலும் தீர்க்கப்படாமல் உள்ளது தெரியவந்தது.
எமி மற்றும் அனோவின் கண்டுபிடிப்புக்கான பயணம் அவர்களுக்கு 12 வயதாக இருந்தபோது தொடங்கியது. எமி, தனக்குப் பிடித்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘ஜார்ஜியாஸ் காட் டேலண்ட்’-ஐ பார்க்கும்போது, அவருடன் முக ஒற்றுமையைக் கொண்ட ஒரு பெண் நடனமாடுவதைக் கண்டு வியந்திருக்கிறார். ஆனால், நடனமாடும் பெண்தான் தனது நீண்டகால சகோதரி என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
இரட்டையர்களின் ஒருவரான அனோ ஒரு டிக்டோக் வீடியோவைப் பார்த்துள்ளார். அதில் நீல நிற முடி கொண்ட ஒரு பெண் தன்னைப் போலவே இருக்க ஷாக்கான அனோ இது குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளார். அப்போதுதான் அவருக்கு பல உண்மைகள் தெரியவந்துள்ளது
வீடியோவில் இருந்த பெண் அவரது இரட்டையர் எமி. முன்னதாக, இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயான ஆசா ஷோனி, 2002ஆம் ஆண்டில் உடல்நிலை கோளாறால் கோமா நிலைக்குச் சென்றுள்ளார். இதன் காரணமாக, அவரது கணவர் கோச்சா ககாரியா ஒரு கொடூர முடிவை எடுத்துள்ளார். அதாவது, இரட்டை சகோதரிகளான அனோவையும் எமியையும் தனித்தனி குடும்பங்களுக்கு விற்றுள்ளார் தந்தை கோச்சா.
அதன்படி, அனோ திபிலிசியில் வளர்ந்தார், அதே சமயம் எமி ஜுக்டிடியில் வளர்ந்தார். இருவருக்கும் ஒருவருக்கொருவர் குறித்தும், அவர்களது ட்வின்ஸ் கதை குறித்தும் எதுவும் தெரியவில்லை.
எவ்வாறாயினும், இரட்டையர்கள் தங்கள் பிரிவுக்கான காரணத்தை தேடுகையில், ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை கண்டறிந்தனர். ஜார்ஜியா மருத்துவமனைகளில் இருந்து திருடப்பட்டு விற்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளில் அவர்கள் இரண்டு பேரும் அடங்குவர்.
பிபிசி அறிக்கையின்படி, இந்த சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜியாவின் தலைநகரான திபிலிசியில் உள்ள ருஸ்டாவேலியில் நடந்தது. அங்கிருக்கும் ஒரு பாலத்தில், 19 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த இரட்டை சகோதரிகளான எமியும் அனோவும் முதல் முறையாக சந்தித்தனர்.