எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்று ஒரு இடம் பொருள் ஏவல் இருக்கு : பத்திரிகையாளர்களை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணம் அடைந்து இன்றோடு ஒரு மாதக்காலம் நிறைவடைகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் சமாதிக்கு கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வந்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு அவர் ஆறுதல் கூறி பேசிக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர், வானதி சீனிவாசன் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், “பிரேமலதாவிடம் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசித்தீர்களா?” என்று கேள்வியெழுப்பினர். இந்தக் கேள்வியால் அதிருப்தியடைந்த வானதி சீனிவாசன், “ஒரு அரசியல் கட்சி தலைவரின் மறைவுக்கு பின், அவரது குடும்பத்தினரை சந்திக்க வரும் போது, அரசியல் ரீதியாகவும், கூட்டணி ரீதியாகவும் யாராவது பேசுவார்களா? அப்படி பேசினால் அது நல்லா இருக்குமா? நம்ம தமிழர்களுக்கு ஒரு மரபு இருக்கு; பாரம்பரியம் இருக்கு. எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்று ஒரு இடம் பொருள் ஏவல் இருக்கு. என்னதான் நாங்க அரசியல் கட்சி தலைவர்களாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் அரசியலை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்கிற அவசியமில்லை” எனக் கூறினார்.
கேப்டன் விஜயகாந்த் குழந்தை மனம் படைத்தவர். கட்சி என்றெல்லாம் இல்லாமல் மாற்றுக் கட்சிக்காரர்களிடம் கூட அவர் காட்டும் அன்பை பார்த்து நாங்கள் நெகிழ்ந்திருக்கிறோம். அப்படிப்பட்ட தலைவரின் இழப்பு தமிழ்நாட்டுக்கே பேரிழப்பு. அவரை கெளரவிக்கும் வகையில் தான் தற்போது அவருக்கு பத்மபூஷன் விருதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்திருக்கிறது” என வானதி சீனிவாசன் கூறினார்.