ஓரம் கட்டப்படும் பதோனி.. ஹோட்டலிலேயே தங்க வைக்கப்பட்ட பரிதாபம்.. சர்ச்சையில் சிக்கிய டெல்லி அணி!

உத்தராகண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் டெல்லி அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டான போது, நட்சத்திர இளம் வீரர் ஆயுஷ் பதோனி மைதானத்தில் இல்லாமல் ஹோட்டலில் தங்கியது ஏன் என்பது தெரிய வந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக ஆடி வரும் இளம் வீரர்களில் முக்கியமானவர் ஆயுஷ் பதோனி. கடந்த 2 சீசன்களில் மொத்தமாக 28 போட்டிகளில் விளையாடியுள்ள ஆயுஷ் பதோனி, 399 ரன்களை விளாசியுள்ளார். டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த வீரரான ஆயுஷ் பதோனியின் திறமையை அறிந்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வாய்ப்பளித்தார்.

இந்த நிலையில் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் ஆயுஷ் பதோனியை சேர்க்காமல் டெல்லி மாநில அணி நிர்வாகம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. நிதீஷ் ராணா டெல்லி அணியை விட்டு விலகிய நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக யாஷ் துல் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் தலைமையில் களமிறங்கிய டெல்லி அணி படுதோல்விகளை சந்தித்தது.

இதனால் ஹிம்மத் சிங் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட இளம் வீரர் ஆயுஷ் பதோனியை அந்த அணி நிர்வாகம், மைதானத்திற்கு வர வேண்டும் என்று கூறி ஹோட்டலிலேயே தங்க வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பதோனிக்கு பதிலாக ஷிதீஷ் சர்மா என்பவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று டெல்லி அணி நிர்வாகம் கேப்டனுக்கு உத்தரவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத டிடிசிஏ நிர்வாகி பேசுகையில், ஷிதிஷ் சர்மாவை விளையாட வைக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது உண்மை தான். அதேபோல் ஆயுஷ் பதோனியை 15 வீரர்கள் கொண்ட அணியில் இருந்து வெளியில் அமர வைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஏனென்றால் ரஞ்சி டிராபி போட்டியில் 15 வீரர்களுக்கு மட்டுமே போட்டிக்கான ஊதியம் அளிக்கப்படும்.

ஆயுஷ் பதோனி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்புடைய பகுதிகளுக்கு அனுமதிக்கப்படாததால், அவரை ஹோட்டலிலேயே தங்க வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி வெறும் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. பதோனிக்கு பதிலாக களமிறங்கிய ஷிதிஷ் சர்மா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர் பிசிசிஐ முன்னாள் நிர்வாகியின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *