IND vs ENG : கேப்டன் வைத்த நம்பிக்கை.. காப்பாற்றிய இளம் ஆல்ரவுண்டர்.. அக்சர் படேலுக்கு பாராட்டு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தியுள்ள அக்சர் படேல், கேப்டன் ரோகித் சர்மாவின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேரம் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்களை குவித்துள்ளது. இதன் மூலமாக இந்திய அணி 175 ரன்கள் முன்னிலையுடன் களத்தில் உள்ளது.
இந்திய அணியின் ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 3ஆம் நாள் ஆட்டத்திலும் இந்திய அணியின் பேட்டிங் தொடரும் பட்சத்தில், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி நகரும் என்று பார்க்கப்படுகிறது. இந்த போட்டியின் டாஸின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அக்சர் படேல் 3வது ஸ்பின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கு அவரின் பேட்டிங் திறமையே காரணம். கடைசியாக சொந்த மண்ணில் ஆடிய ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், அக்சர் படேல் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சிறப்பாக ரன்களை சேர்த்தார். இதனால் குல்தீப் யாதவிற்கு பதிலாக அக்சர் படேலை தேர்வு செய்துள்ளோம் என்று தெரிவித்திருந்தார். இருப்பினும் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நம்பர் 9வது வீரராக அக்சர் படேல் இடம்பெற்றிருந்தார்.
சிறப்பாக பேட்டிங் செய்வார் என்று கூறிவிட்டு, 9வது பேட்ஸ்மேனாக களமிறக்க கூடாது என்ற பலரும் அக்சர் படேலை கிண்டல் செய்தனர். இந்த நிலையில் பவுலிங்கில் பேர்ஸ்டோவ் மற்றும் பென் ஃபோக்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் படேல், நேற்று ஜடேஜாவுடன் இணைந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
62 பந்துகளில் ஒரு சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 35 ரன்கள் சேர்த்துள்ள அவர், தான் ஒரு பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இதுவரை 19 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள அக்சர் படேல், 4 அரைசதம் உட்பட 548 ரன்களை 39.14 பேட்டிங் சராசரியுடன் விளாசியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 9வது வரிசையில் களமிறங்கும் வீரருக்கு இவ்வளவு பேட்டிங் சராசரி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.