கோலி, ரோகித் கூட பக்கத்தில் வர முடியாது.. 2 ஆண்டுகளில் ஜடேஜாவின் லெவலே வேற.. டேட்டாவுடன் சொன்ன ஓஜா!
2022ஆம் ஆண்டுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை விடவும் அதிக ரன்களை ஜடேஜா விளாசி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகில் உள்ளது. இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்கள் சேர்த்துள்ள நிலையில், 175 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. இதற்கு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் பங்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.
கேஎல் ராகுல், கேஎஸ் பரத், அஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஆகியோருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை டிரைவர் சீட்டில் அமர வைத்துள்ளார் ஜடேஜா. ஏற்கனவே பவுலிங்கில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஜடேஜா, பேட்டிங்கிலும் 81 ரன்கள் சேர்த்து களத்தில் விளையாடி வருகிறார். இதனால் அவர் 3வது நாள் ஆட்டத்தில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங்கில் ஜடேஜாவின் எழுச்சி அபரிவிதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் ஜடேஜா அதிக ரன்களை விளாசியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 9 இன்னிங்ஸ்களில் 378 ரன்களையும், ரோகித் சர்மா 10 இன்னிங்ஸ்களில் 356 ரன்களையும் விளாசியுள்ளனர்.
ஆனால் ஜடேஜா 9 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 417 ரன்களை விளாசி இருக்கிறார். இதுகுறித்து முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா பேசுகையில், இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணி பக்கத்தில் திரும்பியதற்கு ஜடேஜாவின் பேட்டிங் முக்கிய காரணம். 2019ஆம் ஆண்டுக்கு பின்னரே, டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 முதல் 50 ரன்கள் வரை சீராக சேர்த்து வந்தார் ஜடேஜா. அதேபோல் சில பெரிய இன்னிங்ஸ்களையும் விளையாடி இருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பல நேரங்களில் ஒரு அணியின் 6 விக்கெட்டை வீழ்த்திவிடடால், அடுத்து வரும் டெய்லண்டர்களை விரைவாக வீழ்த்த நினைப்பார்கள். இதனால் அணியின் முன்னிலையை கட்டுப்படுத்த முடியும் என்று திட்டமிடுவார்கள். ஆனால் 6 விக்கெட்டுகளை இழந்த போதும், இந்திய அணியின் முன்னிலை 175 ரன்களாக உயர்ந்துள்ளது. சொந்த மண்ணில் ஜடேஜாவை மிஸ்டர். கன்சிஸ்டன்ட் என்றே கூறலாம். ஜடேஜாவின் பேட்டிங்கை நம்பர் 3 மற்றும் நம்பர் 4 வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்களோடு தாராளமான ஒப்பிடலாம் என்று கூறியுள்ளார்.