அதென்ன கீழ்வெண்மணி சம்பவம்? 55 ஆண்டுகளுக்கு முன் 44 பேர் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டது ஏன்?
கீழ் வெண்மணி அல்லது கீழ வெண்மணி சம்பவம்.. 55 ஆண்டுகளுக்கு பின்னரும் தமிழ்நாட்டில் இன்றளவும் நினைவு கூறப்படுகிற பெருந்துயரம்.
ஆம் 44 அப்பாவி கூலித் தொழிலாளர்கள்/ ஆணும் பெண்ணும் பச்சிளம் குழந்தைகளுமாய் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டு சாம்பலாக்கப்பட்ட சம்பவம்தான் கீழ வெண்மணி துயரம்.. எதற்காக தெரியுமா? வெறும் ‘அரை படி நெல் கூலி உயர்வுக்காக’ என்பதை இன்றைய தலைமுறையால் புரிந்து வலியை உள்வாங்க முடியுமா? என்பது கேள்விக் குறிதான்.
இந்திய நிலப்பரப்பில் ஆட்சி அதிகாரங்களில் இருந்து கம்யூனிஸ்டுகள் எனும் இடதுசாரிகள் இல்லாது போயிருக்கலாம்.. ஆனால் இந்திய மண்ணில் ஆண்டான் – அடிமை; முதலாளி- தொழிலாளி எனும் அடக்குமுறைக்கு எதிராக வீரம் செறிந்த வரலாற்றுப் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள்தான் இடதுசாரிகள். இதில் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் உள்ளடங்கும்.
இன்று இல்லாது போயிருக்கலாம் மிட்டா மிராசுகள்/ நிலவுடைமையாளர்கள், கூலித் தொழிலாளர்கள், வர்க்க ஒடுக்குமுறை என்ற சொற்றொடர்கள்… ஆனால் 55 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை பெருவெளியில் தலைவிரித்தாடியதுதான் நிலவுடைமையாளர்கள் அல்லது பண்ணையார்களின்/ மிட்டா மிராசுகள் சர்வாதிகாரத்தனம்.. அவர்களிடம் கூலிக்கு வேலை செய்த தொழிலாளர்களை விலங்குகளை விட கொடூரமானவர்களாக நடத்தி உழைப்பை உறிஞ்சி உறிஞ்சி உண்டு கொழுத்தனர். அப்படியான அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் நிலவிய மண்ணில் கம்யூனிஸ்டுகளும் பெரியாரிஸ்டுகளும் தொழிலாளர் சங்கங்களை அமைத்து உழைக்கும் மக்களை சக மனிதர்களாக நடத்து; உழைக்கும் மனிதர்களுக்கும் உரிய கூலி கொடு என முழக்கமிட்டு அணி திரட்டி போராட்டங்களை நடத்தினர். இத்தகைய செங்கொடி ஏந்திய இடதுசாரிகளின் போராட்டம் நிலவுடைமையாளர்கள்/ பண்ணையார்கள்/ மிராசுதார்களை அழித்தொழிப்பது என்ற இலக்கிலும் பயணித்தது.
அப்போது தஞ்சை மண்ணில் உச்சரிக்கப்பட்ட பெருநிலவுடைமையாளர்கள் பெயர்கள் கபிஸ்தலம் மூப்பனார் (ஜிகே மூப்பனார்), பூண்டி வாண்டையார், குன்னியூர் சாம்பசிவ ஐயர், நிலக்கிழார் கோபாலகிருஷ்ண நாயுடு…
1968-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி அரை படி’ நெல்லை கூலி உயர்வாக கேட்டதால் , பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாட்களுக்கும் ‘கூலித் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.. போலீஸ் படையுடன் கோபாலகிருஷ்ண நாயுடு எனும் கொடூரன் தமது அடியாட்களுடன் கூலித் தொழிலாளர்களை வேட்டையாட புறப்பட்டான்..
அப்போது கீழ வெண்மணியில் ராமையாவின் குடிசையில் ஆண்கள், பெண்கள், பச்சிளம் குழந்தைகள் உயிருக்கு அஞ்சி பதுங்கி இருந்தனர். ஈவிரக்கமற்ற கொடூரன் கோபாலகிருஷ்ண நாயுடு ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் தீ வைத்து எரித்து சாம்பலாக்க உத்தரவிட்டான். ரத்த வெறி பிடித்த அடியாட்கள் படை அந்த ராமையாவின் குடிசையை தீக்கிரையாக்கியது. அந்த குடிசைக்குள் பதுங்கியிருந்த 44 மனித உயிர்களும் எழுப்பிய மரண ஓலம் எவர் காதிலும் கேளாமல் சாம்பலாகவே உதிர்ந்து விழுந்தது. தமிழகத்தை பேரதிர்ச்சியில் உறைய வைத்தது 44 பேர் வெந்து சாகடிக்கப்பட்ட வெண்மணி சம்பவம்.
காலத்தின் கொடூரம் என்னவெனில் இந்த பச்சை படுகொலைக்கு காரணமான கோபாலகிருஷ்ண நாயுடுவை நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் சரித்திரம் சும்மா இருப்பது இல்லை..
சக மனிதர்களை சருகுகளைப் போல சாம்பலாக்கிய கோபாலகிருஷ்ண நாயுடுவின் தலையை வெட்டி சாய்த்தது. இடதுசாரிகளின் போராட்டம் என்பதற்காக ஒதுங்காமல் கோபாலகிருஷ்ண நாயுடுவை வெட்டி சாய்த்ததில் பெரும்பாலானோர் தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தினர் என்பதும் சரித்திரம்தான்.
55 ஆண்டுகளாகிவிட்ட போதும் கீழவெண்மணியின் அனலும் சாம்பலும் மனித குலத்தை நேசிக்கும் ஒவ்வொரு நெஞ்சிலும் தனலாய் தகிக்கவே செய்யும்!