பணமில்லா பரிவர்த்தனையில் அமெரிக்காவைக் காட்டிலும் முன்னணியில் உள்ள இந்தியர்கள்! மத்திய அமைச்சர் சொன்ன தகவல்
அமெரிக்க மக்கள் 3 ஆண்டுகளில் செய்த பணமில்லா பரிவர்த்தனையை, இந்திய மக்கள் ஒரே மாதத்தில் செய்துள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். நைஜீரியாவில் வாழும் இந்தியர்களோடு அமைச்சர் மேற்கொண்ட உரையாடலின்போது இந்தத் தகவலை தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா எந்தெந்த துறைகளில் அல்லது நடவடிக்கைகளில் உலக அளவில் முதலிடம் பிடித்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக பணமில்லா பரிவர்த்தனை நடவடிக்கைகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளன என்பதை அவர் மேற்கோள் காட்டினார். அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எளிமையாக மாறியுள்ளது. அதற்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தை நாம் ஆழமாக உள்வாங்கிக் கொண்டதுதான் காரணம். பரிவர்த்தனைகளில் இதை நீங்கள் பார்க்க முடியும். இன்றைக்கு வெகு சிலர் மட்டுமே ரொக்கமாக பணம் செலுத்துகின்றனர். அதேபோல வெகுசிலர் மட்டுமே ரொக்கப் பணத்தை பெறுகின்றனர்.
அமெரிக்காவில் 3 ஆண்டுகளில் செய்த பணமில்லா பரிவர்த்தனைகளைக் காட்டிலும் நாம் 3 மாதங்களில் செய்து முடித்திருக்கிறோம். என்னைப் பொருத்தவரையில் ஒரு நாடு எப்படி சவால்களை எதிர்கொள்கிறது, சவால் மிகுந்த சூழலில் இருந்து எப்படி மீண்டு வருகிறது, பொருளாதார செயல்பாடு எவ்வளவு பலமாக உள்ளது, சராசரி குடிமக்களுடைய வாழ்க்கைத் தரம் எந்த அளவு மேம்பட்டிருக்கிறது, உலகுக்கு கற்பனையாக உள்ள எத்தனை விஷயங்களை நாம் அடைகிறோம் என்பதெல்லாம் மிக முக்கியம்.
அந்த வகையில் பெரிய மனதுடன், பெரிய நம்பிக்கையுடன் சொல்கிறேன். அதையெல்லாம் செய்யும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது. 2020ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காலம் தொடங்கியபோது சர்வதேச அளவிலான வீடியோ கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
அப்போது, கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கப் போகும் மாபெரும் நாடாக இந்தியா இருக்கும் என்று பேசப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல இந்தியாவில் கொரோனா அலை பரவியது மற்றும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குள் உலகின் பிற பகுதிகளுக்கு நாம் கொரோனாவுக்கான மருந்துகளை ஏற்றுமதி செய்ய தொடங்கியிருந்தோம்’’ என்று தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மொத்தம் 3 அலைகளாக பரவியது. அதிலும் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், கொரோனா வைரஸின் டெல்டா திரிபு வடிவம் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. குறிப்பாக 2021 மே 7ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் 4.14 லட்சம் புதிய தொற்றுகளும், 3915 மரணங்களும் பதிவாகியிருந்தன.
அதேபோல பணமில்லா பரிவர்த்தனைகளைப் பொருத்தவரையில் கடந்த 2017-18 நிதியாண்டில் 92 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருந்தன. ஆனால், 2023ஆம் ஆண்டில் மட்டும் 8,375 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.