குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க சுவையான ராகி லட்டு – இதோ ரெசிபி
ராகியில் கலோரிகள், புரதச்சத்துக்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை ஏராளமாக நிரம்பியுள்ளன.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த ராகியில் ஆரோக்கியமான லட்டுக்களை செய்து குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். மேலும் அவர்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள் :
ராகி மாவு – 1 கப்
வெல்லம் – 1 1/2 கப்
வேர்கடலை – 1 கப்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர்
செய்முறை :
முதலில் பாத்திரத்தை எடுத்து அதில் 1 கப் ராகி மாவு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் ராகி மாவை தட்டி சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
ராகி ரொட்டி ஆறிய பின்னர் அதை சிறிய துண்டுகளாக்கி அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து அதில் வேர் கடலையை சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் பொடித்து வைத்துள்ள ராகி மற்றும் வேர் கடலையை சேர்த்து அதனுடன் நுணுக்கிய வெல்லத்தை போட்டு கைகளிலே பிசைந்து கொள்ளவேண்டும்.
குறிப்பு : கைகளால் பிசைவதால் வெல்லம் சிறிது இளகி வரும்.
வெல்லம் இளகி உருண்டை பிடிக்கும் பதத்திற்கு மாவு வந்தவும் அவற்றை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் குழந்தைககள் உண்ண ஆரோக்கியம் நிறைந்த சுவையான ராகி லட்டு தயார்….
தினமும் ஒரு ராகி உருண்டையை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் எளிதாக கிடைக்கும்.