தாய், மனைவியை அடக்கம் செய்த அதே இடத்தில் மகளையும் அடக்கம் செய்யும் இளையராஜா..!
சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்துக்கு உடல் கொண்டுசெல்லப்படும் நிலையில், இன்று நண்பகலில் அடக்கம் செய்யப்படுகிறது.
கல்லீரல் புற்றுநோய் காரணமாக, இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி, நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இலங்கையில் இருந்து விமானம் மூலம் உடல், நேற்று மதியம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
அங்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். பவதாரிணி உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
முதலமைச்சரின் சார்பில் தாம் அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்தார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். பவதாரிணியின் மறைவு வேதனை அளிப்பதாக பிரேமலதா குறிப்பிட்டார். இயக்குநர்கள் பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், மோகன் ராஜா, நடிகர்கள் ஜீவா, ராமராஜன், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், நடிகர் விஜய்யின் தயார் ஷோபா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, விஷால், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூரி, எந்த தந்தைக்கும் ஏற்படக்கூடாதது நடந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஆண்டனி, பாடகர்கள் மனோ, உன்னி கிருஷ்ணன், நடிகர் சதிஷ் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பவதாரிணி உடலுக்கு இயக்குநர் சீனு ராமசாமி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இளையராஜாவின் குடும்பத்தினருக்கு இறைவன் தான் சக்தியை தர வேண்டும் என உருக்கத்துடன் தெரிவித்தனர்.
இந்நிலையில், பவதாரிணியின் மறைவு வருத்தம் அளிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த நடிகர் ரஜினி இளையராஜாவை இன்று நேரில் சந்திக்க உள்ளதாக கூறினார். பல்வேறு தரப்பினரின் அஞ்சலிக்குப் பிறகு, பவதாரிணியின் உடல் சென்னையிலிருந்து தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் பகுதிக்கு நேற்றிரவு 10 மணியளவில் புறப்பட்டது. முல்லைப் பெரியாற்றங்கரையில் உள்ள இளையராஜாவின் பண்ணைவீட்டில் இளையராஜாவின் தாய் சின்னத்தாயி, மனைவி ஜீவா ஆகியோர், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பவதாரிணியின் உடல் இன்று நண்பகலில் அடக்கம் செய்யப்பட உள்ளது.