லால் சலாம் படத்தை தயாரிக்காததற்கு இதுவே காரணம்.. ரகசியத்தை கூறிய ரஜினிகாந்த்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடிக்க, தயாராகியிருக்கும் படம் லால் சலாம். ரஜினிகாந்த் இதில் கௌரவ வேடம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 9 வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தொடர்ந்து, விழாவில் பேசிய ரஜினிகாந்த், பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது பேச்சைத் தொடங்கினார்.
“என்னோட நண்பர் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி அகால மரணமடைஞ்சிருக்காங்க. அதுக்கு என்னோட ஆழ்ந்த இரங்கல்கள்” என்றவர், மறைந்த விஜயகாந்த் மற்றும் கவுண்டமணி, செந்தில் உடனான படப்பிடிப்பு அனுபவங்கள் ஆகியவற்றை நினைவுகூர்ந்தார்.
இதையடுத்து லால் சலாம் படம் குறித்து பேசுகையில், “சிவப்புக்கு நிறைய அடையாளங்கள் இருக்கு. கம்யூனிஸ்ட், வன்முறை, புரட்சின்னு பலவற்றுக்கும் பயன்படுத்துவாங்க. ஐஸ்வர்யா அதை புரட்சிக்கு தேர்ந்தெடுத்திருக்காங்க. இந்தக் கதைக்கு தேசிய விருது கிடைக்கும்னு என் மகள் சொன்னாங்க. விருதுக்காக இந்தக் கதையை கேட்க மாட்டேன்னு சொன்னேன். அப்புறம், இது உண்மை கதைன்னு சொன்னாங்க. அப்புறமாத்தான் கதை கேட்டேன்.
“மத நல்லிணக்கத்தை பத்தி இந்தப் படம் முக்கியமா பேசியிருக்கு. மனுஷங்க சந்தோஷமா இருக்கனும்னுதான் மதம் உருவாச்சு. இப்போ நான்தான் பெருசு, நீதான் பெருசுன்னு பேசிக்கிறாங்க. எந்த மதத்துல உண்மை, நியாயம் இருக்கோ அதுதான் சரியாக இருக்கும். ரஜினிகாந்தே இந்தப் படத்தை தயாரிக்கலாம், அவர்கிட்ட இல்லாத பணமா, கோடி கோடியா வச்சிருப்பார்னு நிறைய பேர் பேசிகிட்டாங்க. பாபா படத்துக்கு அப்புறம் தயாரிப்பு நமக்கு ராசியில்லைன்னு நிறுத்திட்டேன்” என்றார்.
ரஜினிகாந்த் ஏன் இப்போது படம் தயாரிப்பதில்லை, இனி படம் தயாரிப்பாரா என்ற கேள்விகள் அடிக்கடி கேட்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ளார்.