இன்ஸ்டா லைவில் ரசிகர் கேட்ட கேள்வி… சிவகார்த்திகேயனின் நச் பதில்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அயலான் திரைப்படம் பல தடைகளை தாண்டி இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி உள்ளது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்ட படம் அயலான். ஏலியனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரகுல் ப்ரீத் சிங், பானுபிரியா, யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரோஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சொந்த ஊரில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட சிவகார்த்திகேயன் சில காரணங்களால் சென்னை வருகிறார். அதேபோல் வில்லன் நோவா கேஸ் தயாரிக்க சக்தி வாய்ந்த பொருள் ஒன்றை பயன்படுத்துகிறார். அது பூமிக்கு மட்டுமில்லாமல் வேற்றுகிரவத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் ஏலியன் வருகிறது. இவர்கள் மூவரும் இணைக்கும் கதையே அயலான்.
ஏலியன் படம் என்றால் ஹாலிவுட் படங்களில் வருவது போல் கொடூர உருவம், ராட்சச சக்தி என இல்லாமல். குழந்தைகளை கவரும் வகையில் குட்டி ஏலியனை உருவாக்கியுள்ளனர். அதில் ஒரு அளவு வெற்றியும் கண்டுள்ளனர். இந்த ஏலியன் வில்லனின் சதியை முறியடிக்கிறதா? அதற்கு சிவகார்த்திகேயன் எப்படி உதவுகிறார்? என திரைக்கதை நகர்கிறது. இப்படம் கலவையான விமர்சனங்களைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இப்படத்தின் அடுத்த பாகமான ‘அயலான் 2’ உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து படக்குழு இன்ஸ்டா லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர். அப்போது Unlucky அஜித் என்ற இன்ஸ்டா பக்கத்திலிருந்து, அயலான் பட Alienக்கு கூட ஆள் இருக்கு.. எனக்கு இல்ல.. நான் சிங்கிளா இருக்கேன் என்று கூற, அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், முதல்ல உன் யூசர் நேம் மாத்துப்பா என்று கூற அதற்கு இசையமைப்பாளர் ரகுமான் சிரித்துக்கொண்டே ஆமா என்று கூறுவது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.