Ranji Trophy : 252 வருட கிரிக்கெட் வரலாற்றிலேயே மாபெரும் சாதனை.. டி20 போட்டிகளை மிஞ்சிய டெஸ்ட்

ரஞ்சி ட்ராபி போட்டி ஒன்று டி20 போட்டிகளுக்கே சவால் விடும் வகையில் இமாலய ரன் ரேட் சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஒரு ஓவருக்கு 11.02 ரன்கள் என்கிற ரன் ரேட்டில் ரன் குவிக்கப்பட்டு இருக்கிறது.

ஹைதராபாத் – அருணாச்சல பிரதேசம் அணிகள் இடையேயான ரஞ்சி ட்ராபி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேசம் 172 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆன நிலையில், அடுத்து ஹைதராபாத் அணி அதிரடி பேட்டிங் செய்து 48 ஓவர்களில் 529 ரன்கள் குவித்தது. இதன் ரன் ரேட் 11.02 ஆகும்.

1772 முதல் முதல் தர டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. இத்தனை ஆண்டுகளில் எந்தப் போட்டியிலும் இவ்வளவு பெரிய ரன் ரேட்டை எந்த அணியும் தொட்டதில்லை. அதிகபட்சமே 6.5 ரன்கள் என்ற ரன் ரேட் என்பதே இதுவரை பெரிய சாதனையாக இருந்தது. அந்த வகையில் 252 வருட முதல் தர டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு உள்ளூர் அல்லது சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் நடக்காத சாதனை ஆகும்.

மேலும், இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து முதல் நாள் ஆட்டத்தில் 701 ரன்கள் குவித்து இருக்கின்றன. இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டது. உலக அளவில் முதல் தர டெஸ்ட் போட்டிகளில் ஒரே நாளில் 700 ரன்களுக்கும் மேல் குவிக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். ரஞ்சி ட்ராபி வரலாற்றில் இதுவே முதல்முறை.

ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் தன்மய் அகர்வால் மற்றும் ராகுல் சிங் ரன் மெஷினாக மாறி பவுண்டரி மழை பொழிந்தனர். ராகுல் சிங் 105 பந்துகளில் 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து தன்மய் அகர்வால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 160 பந்துகளில் 323 ரன்கள் குவித்து இருந்தார். அவர் 147 பந்துகளில் 300 ரன்கள் குவித்து உலக அளவில் அதிவேக முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்தப் போட்டியில் ஹைதரபாத் அணி 48 ஓவர்களில் 529 ரன்கள் குவித்த நிலையில் அந்த அணியின் ரன் ரேட் 11.02 ஆக இருந்தது. அதன் மூலம் உலக அளவில் சர்வதேச மற்றும் உள்ளூர் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதிக ரன் ரேட்டில் ரன் குவிக்கப்பட்ட போட்டியாக இது மாறி இருக்கிறது. ஒருநாள் போட்டிகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட இந்த ரன் ரேட் மிக மிக அதிகம் ஆகும்.

கடந்த 2022 டிசம்பர் மாதம் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 101 ஓவர்களில் 657 ரன்கள் குவித்து இருந்தது. அதன் ரன் ரேட் 6.5 ஆகும். அதுவே அதிகபட்ச டெஸ்ட் ரன் ரேட் ஆக இருந்தது. அதை விட ஒரு மடங்கு கூடுதல் வேகத்தில் ரன் குவிக்கப்பட்டு 11.02 ரன் ரேட்டை எட்டி இருக்கிறது இந்த ரஞ்சி ட்ராபி போட்டி. அருணாச்சல பிரதேச அணியின் பயிற்சியின்மையும் இந்த இமாலய சாதனைக்கு காரணம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *