அம்பானி-யின் ‘இலவசம்’.. லட்டு மாதிரி கைக்கு வந்த அமெரிக்க சாம்ராஜ்ஜியம்.. இது வெறும் ட்ரைலர் தான்!
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 10 வருடமாகக் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை விடுத்து பல துறைகளில் இறங்கி வருவது அனைவருக்கும் தெரியும். அப்படி முகேஷ் அம்பானி ஒரு முக்கியமான துறையை டார்கெட் செய்து களமிறங்கியது தான் மீடியா.
ஏற்கனவே வயாகாம்18 மூலம் பெரும் மீடியா வர்த்தகத்தை வைத்திருந்தாலும், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் துறையிலும், ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு துறையிலும் பெரும் வர்த்தகத்தை அள்ள வேண்டும் எனத் திட்டமிட்டு ஜியோ சினிமா தளத்தைப் பெரும் முதலீட்டு உடன் துவங்கியது ரிலையன்ஸ். முகேஷ் அம்பானி வழக்கம் போல் மக்களை ஈர்க்க இலவசம் என ஆயுதத்தைப் பயன்படுத்திய காரணத்தால் இப்பிரிவில் கொடிகட்டிப் பறந்து வந்த வால்ட் டிஸ்னி-யின் சர்வதேச வர்த்தகத்தைப் போல இந்திய வர்த்தகத்திலும் பெரும் ஓட்டை விழுந்தது.
இதனால் கட்டணம் வசூலித்துக் கிரிக்கெட் போட்டிகளைக் காட்டி வந்த டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளம் தற்போது இலவசமாக அளிக்கத் துவங்கியுள்ளது. இது தொடர்ந்தால் வால்ட் டிஸ்னி பெரும் இழப்பை எதிர்கொள்ளும் என்பதால் சக போட்டியாளரைக் கூட்டாளியாக்கிக்கொள்ள முடிவு செய்து பல கூட்டணி முயற்சிகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, வால்ட் டிஸ்னி – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – வால்ட் டிஸ்னி மத்தியிலான பேச்சுவார்த்தை உறுதியான நிலையில் கடந்த வாரம் லண்டனில் இரு நிறுவனங்கள் மத்தியிலும் non-binding ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களுக்கு மத்தியிலான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும், அதேபோல் இது உறுதியான இணைக்கப்படுவதற்கான ஒப்பந்தம் இல்லை.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் வாய்காம்18 கூட்டணி மொத்தமாக வால்ட் டிஸ்னி இந்தியா உடன் இணைய உள்ளது. இதன் மூலம் இக்கூட்டணியில் 115 டிவி சேனல்கள் இருக்கும் (ஸ்டார் இந்தியாவின் 77 சேனல்கள், வாய்கம் 18 கீழ் 38 சேனல்), டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா போன்ற இரு ஸ்ட்ரிமிங் சேனல், 2 லட்சம் மணிநேரத்திற்கான கன்டென்ட் ஆகியவை இக்கூட்டணியில் இருக்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வாய்காம்18 நிறுவனத்தில் Bodhi Tree நிறுவனம் 15.97 சதவீத பங்குகளைக் கொண்டு இருக்கும் வேளையில் மற்ற பங்குகளை ரிலையன்ஸ் வைத்துள்ளது. இப்படியிருக்கும் வேலையில் வாய்காம்18 நிறுவனத்தின் கீழ் ஒரு கிளை நிறுவனத்தை உருவாக்கி வாட்ல் டிஸ்னி இந்தியா இணைக்கப்பட்டு இக்கூட்டணியில் ரிலையன்ஸ் 51 சதவீத பங்குகளும், டிஸ்னி 49 சதவீத பங்குகளும் கொண்டு இருக்கும்.
இந்தப் பங்கீட்டை அளவீட்டை பெற பங்கு பரிமாற்றங்கள் தாண்டி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வால்ட் டிஸ்னி-க்குக் கூடுதலாகப் பணத்தையும் அளிக்க உள்ளது. இந்த இணைப்பு மூலம் இந்திய மீடியா துறையில் மிகப்பெரிய ஆதிக்கத்தை ரிலையன்ஸ் அடைய உள்ளதால் முதலீட்டாளர்கள் கட்டாயம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதீத பண பலம் காரணமாக இலவச சேவைகளைக் கொடுத்து அனைத்து துறையிலும் ஆதிக்கம் பெற்று வருகிறார். ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவை மூலம் ஏர்டெல் 20 வருடமாகப் படிப்படியாக உருவாக்கி சாம்ராஜ்ஜியத்தின் ஆதிக்கத்தை ஓரம் கட்டி தற்போது மாபெரும் டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இதேபோன்ற கேம் முகேஷ் அம்பானி ஐபிஎல் ஒளிபரப்பில் செய்ததன் விளைவு தான் தற்போது வால்ட் டிஸ்னி வேறு கூட்டணி இல்லாமல் சண்டைக்காரன் உடன் கூட்டணி சேர வேண்டிய கட்டாயம் உருவாக்கியுள்ளது. இதேவேளையில் வால்ட் டிஸ்னி சர்வதேச அளவில் வர்த்தகப் பாதிப்பையும், வருவாய் இழப்பை எதிர்கொண்டதும் உண்மை.